search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    கேரள விவசாயிகளின் கடனுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் - ரிசர்வ் வங்கிக்கு ராகுல் காந்தி கடிதம்

    கனமழையால் மீண்டும் பாதிக்கப்பட்ட கேரள விவசாயிகளுக்கான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கேரளா மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.

    வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமான மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகினர்.

    இதையடுத்து, வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டார். நிலச்சரிவு ஏற்பட்ட கவளப்பாறை பகுதிக்கு சென்று நிலச்சரிவின் பாதிப்புகளை பார்வையிட்டார்.

    ராகுல் காந்தியின் கடிதம்

    இந்நிலையில், கனமழையால் மீண்டும் பாதிக்கப்பட்ட கேரள விவசாயிகளுக்கான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.   

    இதுதொடர்பாக, வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கேரளா மாநிலம் கடந்த ஒரு ஆண்டுக்குள் மிக மோசமான மழை பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே, கேரள விவசாயிகள் செலுத்த வேண்டிய விவசாய கடனை செலுத்துவதற்கான காலக்கெடுவை 2019, டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×