search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்விலாஸ் பஸ்வான்
    X
    ராம்விலாஸ் பஸ்வான்

    அதிக விலைக்கு ஓட்டல் பண்டங்கள் விற்றால் விளக்கம் கேட்கப்படும் - மத்திய மந்திரி அறிவிப்பு

    அதிக விலைக்கு ஓட்டல் பண்டங்கள் விற்றால் விளக்கம் கேட்கப்படும் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடிகர் ராகுல் கோஷ் சண்டிகாரில் உள்ள மேரியட் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். அவர் 2 வாழைப்பழம் சாப்பிட்டதற்கு ரூ.442 பில் வந்திருந்தது. இதுபற்றி அவர் விமர்சித்து இருந்தார்.

    மும்பையில்  உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒருவர் 2 அவித்த முட்டை சாப்பிட்டதற்கு ரூ.1,700 பில் போடப்பட்டு இருந்தது.அவரும் இதுபற்றி சமூக வலைதளத்தில் தகவலை வெளியிட்டார்.

    இருவி‌ஷயங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பலரும் இதுபற்றி கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்த விலை வி‌ஷயங்கள் பற்றி நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:-

    நட்சத்திர ஓட்டலில் வாழைப்பழம், முட்டைகளுக்கு இவ்வளவு அதிக விலை வசூலித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது.

    இதுபோன்ற நியாயமற்ற விலை நிர்ணயித்து வர்த்தகம் செய்தால் அதுபற்றி உரிய நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்படும்.

    ஓட்டல்களுக்கு வெளியே வந்தால் ஒரு முட்டை சில ரூபாய்க்கு கிடைக்கும் போது அதை ஆயிரம் ரூபாய்க்கு விற்றது என்பது முக்கியமான வி‌ஷயமாக கவனிக்கப்பட வேண்டி இருக்கிறது.

    உணவு

    அனைத்து ஓட்டல்களும் ஓட்டல் பண்டங்களின் விலையை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும்.

    ஒரு பொருளுக்கு அதிக பட்ச விலை (எம்.ஆர்.பி.) நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் போது அதை 2 மடங்குக்கு மேல் விற்பனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தற்போது நுகர்வேர் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் இதுபோன்ற வி‌ஷயங்களை தடுக்கும் அம்சங்கள் உள்ளன. இன்னும் 6 மாதத்தில் இந்த மசோதா அமலுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நுகர்வோர் விவகார செயலாளர் அவினாஷ் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, நியாயமற்ற வர்த்தக முறைகள் நடப்பது பற்றி முகாந்திரங்கள் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று மந்திரி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் உரிய விளக்கம் கேட்கப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×