search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடகத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம்- எடியூரப்பா

    கர்நாடகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர் களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
    மங்களூரு :

    கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது.

    கடலோர பகுதிகளான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. ஆனால் பெங்களூரு உள்பட மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மாநிலம் முழுவதும் மழை இல்லை.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார், சிவமொக்கா, குடகு, மைசூரு, சிக்க மகளூரு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் வீடு, உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதே சமயம் மராட்டிய மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மராட்டிய மாநில எல்லையில் அமைந்து உள்ள வடகர்நாடக மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதற்கிடையே அங்கு கனமழையும் கொட்டி தீர்த்தது. இதனால் வீடு, உடைமைகளை இழந்த மக்கள் பல்வேறு முகாம்களில் தங்கி உள்ளனர். வடகர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூருவுக்கு சென்றார். மங்களூரு அருகே பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில், நளின்குமார் கட்டீல் எம்.பி., மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா ஆகியோர் வரவேற்றனர்.

    வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.

    இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெல்தங்கடிக்கு சென்ற முதல்-மந்திரி எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குக்காவு பகுதியில் உள்ள முகாமில் தங்கி உள்ள 300-க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து எடியூரப்பா ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

    இந்த சந்தர்ப்பத்தில் சிலர் எங்களது வீடுகள் இடிந்து விட்டதால் வீடுகள் கட்ட உதவிதொகை வழங்க வேண்டும் என்று எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ரூ.5 லட்சம் அரசு சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் புதிதாக வீடு கட்டும் வரை வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் அந்த முகாமில் இருந்து எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.

    இதன்பின்னர் பண்ட்வால் பகுதிக்கு சென்ற முதல்-மந்திரி எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் தர்மஸ்தாலாவுக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகள் குறித்தும், அதனை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதனையடுத்து தர்மஸ்தாலாவில் உள்ள மஞ்சுநாதா கோவிலில் சாமி தரிசனம் செய்த எடியூரப்பா அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில் வருகிற 16-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு செல்ல உள்ளேன். எங்கள் கட்சியின் தலைவருடன் ஆலோசித்த பின்னர் புதிய மந்திரிகள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
    Next Story
    ×