search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேஎப் 17 ரக போர் விமானம்
    X
    ஜேஎப் 17 ரக போர் விமானம்

    லடாக் எல்லையில் பாக். போர் விமானங்கள் நடமாட்டம் அதிகரிப்பு - இந்திய ராணுவம் உஷார்

    லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
    லடாக்:

    ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது.

    மேலும் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீரை சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கான தனது நாட்டு தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷியாவும், பாகிஸ்தானுக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இந்த நிலையில் லடாக் எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. லடாக் எல்லையில் பாகிஸ்தானின் பகுதியான ஸ்கர்டு விமானப்படை தளத்தில் ஜே.எப்.17 ரக போர் விமானங்களை நிறுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அந்த விமானப்படை தளத்தில் பாகிஸ்தானின் சரக்கு மற்றும் போர் விமானங்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக இந்தியாவுக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. சி-130 சரக்கு விமானங்கள் விமானப்படை தளத்துக்கு வந்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் போர் விமானங்களின் நடமாட்டத்தை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    இந்த நிலையில் காஷ்மீரில் பக்ரீத் பண்டிகை அமைதியாக கொண்டாடப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து இருக்கிறது. அனந்தநாக், பாராமுல்லா, பத்காம், பந்திகார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் ஏராளமானோர் சிறப்பு தொழுகை நடத்தினார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×