search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
    X
    திருப்பதியில் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    தொடர் விடுமுறை- திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இலவச தரிசனத்துக்கு 30 மணிநேரம் ஆனது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதேபோல் மாதத்தின் 2-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்ததாலும், இன்று திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை விடுமுறையாலும், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருமலையில், உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 1 மற்றும் 2-ல் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் காலையிலேயே பக்தர்கள் நிரம்பி, 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசன பக்தர்கள், திருமலையில் உள்ள லேப்பாட்சி வழியாக சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் ஒரேநாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று வைகுண்டம் கியூகாம்ப்ளக்ஸ் வழியாக ஏழுமலையானை வழிபட சென்ற இலவச தரிசன பக்தர்களுக்கு 28 மணி நேரத்தில் இருந்து 30 மணிநேரம் ஆனது. டைம்ஸ்லாட் கார்டு பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 7 மணிநேரம் ஆனது. 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 4 மணிநேரமும், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நடந்து திருமலைக்கு வந்த திவ்ய தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணிநேரமும் ஆனது.

    திருமலையில் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாக்கள், லட்டு பிரசாதம் வழங்கும் கவுண்ட்டர்கள், அன்னதானக்கூடம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இன்று, நாளை, நாளை மறுநாள் 3 நாட்களுக்கு புரோட்டோக்கால் தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ஆகியவற்றில் பக்தர்கள் குறைந்த கண்ணிக்கையில் அனுமதிக்கப்பட உள்ளதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புரோட்டோகால் வி.ஐ.பி.க்கள் நேரடியாக வந்தால் மட்டுமே ஏழுமலையான் தரிசனம் வழங்கப்படும். பக்தர்களின் வருகை அதிகரித்ததை ஒட்டி வாடகைக்கு அறை கிடைக்காமல் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இன்று இரவு வரை இந்தநிலை நீடிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×