search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி
    X
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

    காஷ்மீருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் - ஜனாதிபதிக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்

    காஷ்மீருக்கு செல்ல முயன்று தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

    காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் கண்டறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று ஸ்ரீநகர் சென்றனர். 

    ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காரணம் கூறி ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் காஷ்மீருக்கு செல்லாமலேயே சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் டெல்லி திரும்பினர்.

    இந்நிலையில், தன்னை காஷ்மீருக்கு செல்ல அனுமதிக்காதது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    காஷ்மீருக்குள் செல்ல முயன்றபோது என்னை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். எனது அடிப்படை ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் உங்களுக்கு இந்த கடிதத்தின் மூலம் எனது ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதற்கான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

    டி.ராஜா மற்றும் சீதாராம் யெச்சூரி

    உடல்நலக் குறைவால் அவதிப்படும் எனது கட்சியை சார்ந்தவரும் நான்கு முறை ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினருமான முகமது யுசுப் தரிஹமியை 9-ம் தேதி சந்திக்கப் போவதாக மாநில கவர்னரிடம் தெரிவித்தேன். ஆனால் என்னையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவையும் காஷ்மீருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இது எனது அடிப்படை ஜனநாயக உரிமையை மறுக்கும் செயல். ஜனநாயக நாட்டில் இதுபோன்ற செயல் மிகவும் விசித்திரமான ஒன்று. 

    காஷ்மீரின் சில பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுவதாகவும், போலீசார் அவர்கள் மீது வன்முறையில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இது மிகவும் தீவிரமான விவகாரம். ஆகையால் ஜனாதிபதியாகிய நீங்கள் இதில் தலையீட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×