search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடகத்தில் மழை பாதிப்பு நிவாரண பணிகளுக்கு ரூ.5000 கோடி தேவை- எடியூரப்பா

    கர்நாடகத்தில் மழை பாதிப்பு நிவாரண பணிகளுக்கு ரூ.5,000 கோடி தேவை என்று கர்நாடகா முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    பெலகாவியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் கூடுதலாக ராணுவ வீரர்களை அனுப்புமாறு ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மாலைக்குள் கூடுதல் ராணுவ வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர் கர்நாடகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு ரூ.5,000 கோடி தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் எந்த பிரச்சினையும் இல்லை.

    இன்னும் 3 நாட்கள் இங்கேயே இருந்து நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்பார்வையிட உள்ளேன். 30 ஆயிரம் வீடுகள் கட்ட வேண்டியுள்ளது. நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் நிவாரண பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் மிக மோசமாக உள்ளது. அதனால் கர்நாடக மக்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டும்.

    மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மத்திய குழு விரைவில் இங்கு வந்து சேதங்களை மதிப்பீடு செய்யும். மராட்டிய மாநில அரசுடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். கொய்னா அணையில் இருந்து கூடுதலாக நீர் வெளியேற்றுவது குறித்து அந்த மாநில அரசு முன்கூட்டியே நமக்கு தகவலை அளிக்கும்.

    அதன் அடிப்படையில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதிகாரிகள் சிறப்பான முறையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் மக்கள் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. மாநில அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.

    வட கர்நாடகத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அலமட்டி மற்றும் நாராயணபுரா ஆகிய அணைகளில் தேங்கியுள்ள தண்ணீரால், அவற்றை ஒட்டியுள்ள மராட்டிய மாநில மாவட்டங்களான கோலாப்பூர், சங்கலி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறானது.

    அலமட்டி அணையில் இருந்து கோலாப்பூர் மற்றும் சங்கலி மாவட்டங்கள் மிக தொலைவில் அமைந்துள்ளன. அதனால் அந்த அணையில் தேங்கும் நீர், அந்த மாவட்டங்கள் வரை செல்வதற்கான வாய்ப்பு இல்லை. அலமட்டி அணையில் அதிகபட்சமாக 123 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை தேக்கி வைக்க முடியும்.

    ஆனால் அந்த அணையின் தற்போது நீர்இருப்பு 85 டி.எம்.சி. ஆகும். நாராயணபுரா அணையின் மொத்த கொள்ளளவு 33 டி.எம்.சி. ஆகும். அந்த அணையின் தற்போதைய நீர்இருப்பு 18 டி.எம்.சி. ஆகும். அதனால் அலமட்டி அணையில் தேக்கப்படும் நீரால், மராட்டிய மாநில மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுபற்றி மராட்டிய மாநில முதல்-மந்திரியுடன் 3 முறை விவாதித்துள்ளேன். அதனால் ஊடகங்களில் வெளியான செய்தி, உண்மைக்கு புறம்பானது.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    Next Story
    ×