search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்தியாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா
    X
    செய்தியாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா

    கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பருக் அப்துல்லா

    ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா இன்று கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இரவோடு இரவாக காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    பின்னர், அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என செய்தி வெளியானது.

    உமர் அப்துல்லாவுடன் மெஹபூபா முப்தி

    இன்று பாராளுமன்ற மக்களவையில் இவ்விவகாரம் எதிரொலித்தபோது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, நாங்கள் யாரையும் சிறை வைக்கவில்லை. அவரவர்களின் விருப்பப்படி வீடுகளில் உள்ளனர் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா இன்று கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் அமித் ஷா தெரிவித்ததுபோல், சுதந்திரமாக என் விருப்பம்போல் நான் வீட்டில் அடைந்து கிடக்கவில்லை. என் வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே போக முடியாது. உள்ளே வேறு யாரும் வர முடியாது. என் வீட்டு வாசலில் போலீஸ் டி.எஸ்.பி. ஒருவர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.

    இப்போதுகூட நான் கதவை உடைத்துக் கொண்டுதான் உங்களை சந்தித்து பேச வந்திருக்கிறேன். அவர்கள் (மத்திய அரசு) ஜம்மு-காஷ்மீரையும் லடாக்கையும் பிரித்து விட்டனர். ஆனால், இதயங்களை பிரிக்க முடியுமா? இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்துவிட முடியுமா?

    என்னுடைய இந்தியா மதச்சார்பற்ற, ஒருமைப்பாட்டு உணர்வு கொண்ட அனைவருக்குமே ஆன நாடு என்று நான் நினைத்திருந்தேன். இதற்காக கடந்த 70 ஆண்டுகளாக போராடிய நாங்கள் இன்று குற்றவாளிகள் போல் நடத்தப்படுகிறோம்.

    தற்போது ஜனநாயக மரபுகள் புறக்கணிக்கப்பட்டு, கொடுங்கோண்மை அதிகாரம் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.எழுத்துப்பூர்வமான எந்த உத்தரவும் இல்லாமல் நாங்கள் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம்.

    நாங்கள் கற்களை வீசும் கும்பலை சேர்ந்தவர்களோ, கொலையாளிகளோ கிடையாது. சட்டத்தின்மீது நம்பிக்கை கொண்ட நாங்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை எப்போதுமே தேர்வு  செய்ததில்லை.
    காந்தியின் பாதையை மட்டுமே நாங்கள் பின்பற்றி வந்திருக்கிறோம். இப்போது இப்படி நடப்பது ஏன்? அதற்கான காரணம் என்ன?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×