search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஐ
    X
    சிபிஐ

    உன்னாவ் விவகாரம் - பா.ஜனதா எம்.எல்.ஏ.விடம் சிறையில் சி.பி.ஐ. விசாரணை

    உன்னாவ் விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.விடம் சிறையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தினர்.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் குல்தீப் சிங் செங்கர் எம்.எல்.ஏ.வால் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி உள்ளது.

    பாதிக்கப்பட்ட இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் பெண்ணின் உறவினர்கள் இருவர் பலியானார்கள். லக்னோவில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணுக்கு தற்போது நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உயிரை காப்பாற்ற 24 மணி நேரமும் டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதில் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மீது வழக்குப் பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க பல்வேறு குழுக்களை சி.பி.ஐ. அமைத்துள்ளது. இந்த நிலையில் சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. செங்கரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் அடங்கிய குழு நேற்று விசாரணை நடத்தியது.

    சாலை விபத்து தொடர்பாக அவரிடம் பல மணி நேரம் கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே செங்கரிடம் இருந்த துப்பாக்கி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக உன்னாவ் மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

    செங்கரிடம் உள்ள துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்துள்ளோம். அவரின் 3 துப்பாக்கிகளையும் ஒப்படைக்கும்படி அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே செங்கர் எம்.எல்.ஏ.வை நாளை (5-ந்தேதி) கோர்ட்டில் ஆஜர் படுத்துமாறு வாரண்டு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    உன்னாவ் வழக்கில் மொத்தம் 14 பேர் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்து மாறு டெல்லி செசன்சு கோர்ட்டு நீதிபதி தர்மேஷ் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×