search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி எடியூரப்பா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.
    X
    முதல்-மந்திரி எடியூரப்பா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது எடுத்தபடம்.

    “காபி டே“ நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் சொந்த ஊரில் தகனம்

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தொழில் அதிபர் சித்தார்த்தாவின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
    மங்களூரு :

    சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபர் சித்தார்த்தா (வயது 60).

    முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான சித்தார்த்தா உலகம் முழுவதும் ‘கபே காபி டே’ எனும் பிரபலமான ஓட்டல்களை நடத்தி வந்தார். அதோடு தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்களையும் நடத்தி வந்தார். எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த சில மாதங்களிலேயே சித்தார்த்தாதுக்கு சொந்தமான பெங்களூரு, சிக்கமகளூரு, மங்களூரு உள்பட பல பகுதிகளில் அமைந்திருக்கும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் முடிவில் சித்தார்த்தாதுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பலரிடம் இருந்து சித்தார்த்தா கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் கடனை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி காரில் தனது டிரைவர் பசவராஜுடன், சித்தார்த்தா மங்களூருவுக்கு சென்றார். மங்களூரு அருகே ஓடும் நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் சென்றபோது காரை நிறுத்தி இறங்கி சென்ற சித்தார்த்தா அதன்பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த்தாதின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து சித்தார்த்தா மாயமாகி விட்டதாக டிரைவர் பசவராஜ் கங்கனாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சித்தார்த்தா மாயமானதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் நேத்ராவதி ஆற்றில் ஒருவர் குதித்ததை நான் பார்த்தேன் என்று மீனவர் ஒருவரும் கூறினார். இதனால் ஆற்றில் குதித்தது சித்தார்த்தாவாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. மேலும் அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், கடலோர காவல் படை குழுமத்தினர், ஊர்க்காவல் படையினர், மீனவர்கள் என பலரும் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 2-வது நாளாக சித்தார்த்தாவின் உடலை தேடும் பணி முழுவீச்சில் நடந்தது. இதற்கிடையே சித்தார்த்தா மாயமானது குறித்த தகவல் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், பிரபலங்கள் பெங்களூருவில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்கள். நேற்று முன்தினம் முழுவதும் தேடிப்பார்த்தும் சித்தார்த்தா கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் மங்களூரு அருகே ஒய்கை பஜார் பகுதியில் ஓடும் நேத்ராவதி ஆற்றில் சித்தார்த்தா பிணமாக கரை ஒதுங்கினார். இதனை பார்த்த மீனவர்கள் கங்கனாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு போலீசார் மீட்பு குழுவினருடன் விரைந்து சென்று சித்தார்த்தாதின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதாவது 36 மணி நேர தேடலுக்கு பிறகு சித்தார்த்தா பிணமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சித்தார்த்தா பிணமாக மீட்கப்பட்டது பற்றி அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் கூடி அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் போலீசார் சித்தார்த்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு வென்லாக் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காலை 10.45 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து சித்தார்த்தாதின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சீக்கேனஹள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே சித்தார்த்தா தற்கொலை சம்பவம் குறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இன்று காலை 6 மணியளவில் ஒய்கை பஜார் பகுதியில் ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் ஒரு உடல் மீட்கப்பட்டது. அது சித்தார்த்தாதின் உடல் என்று அவருடைய உறவினர்கள் உறுதிப்படுத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வென்லாக் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கமங்களூரு வென்லாக் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட தொழில் அதிபர் சித்தார்த்தாவின் உடல், நேரடியாக சிக்கமகளூரு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது சிக்கமகளூரு மாவட்டத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள சித்தார்த்தாவுக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தில் ஆம்புலன்ஸ் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் சித்தார்த்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அதையடுத்து அவருடைய உடலுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டு மூடிகெரே தாலுகா சீக்கேனஹள்ளி கிராமத்தில் உள்ள சித்தார்த்தாவுக்கு சொந்தமான சேதனஹள்ளி காபி எஸ்டேட்டுக்கு சென்றது. அங்கு அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவருடைய தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சித்தார்த்தாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் திரண்டு வந்து கண்ணீர் மல்க சித்தார்த்தாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    குறிப்பாக சித்தார்த்தாவின் தாய் வசந்தி ஹெக்டே, தனது மகனின் உடலைப் பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதார். சித்தார்த்தாவுக்கு சொந்தமான வீடு சேதனஹள்ளி கிராமத்தில்தான் உள்ளது. அங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி சித்தார்த்தாவின் உருவப்படத்தை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    சித்தார்த்தாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூடிகெரே தாலுகாவில் கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளிலும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சித்தார்த்தாவின் மறைவையொட்டி அவருக்கு சொந்தமாக சிக்கமகளூரு, ஹாசன், குடகு மாவட்டம் மடிகேரி ஆகிய பகுதிகளில் உள்ள காபி நிறுவனங்கள் மற்றும் எஸ்டேட்கள் நேற்று மூடப்பட்டன. அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் சித்தார்த்தாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல் சேதனஹள்ளி கிராமத்தில் உள்ள 2 காபி நிறுவனங்களும் மூடப்பட்டன.

    இதற்கிடையே முதல்-மந்திரி எடியூரப்பா தனி ஹெலிகாப்டர் மூலம் சிக்கமகளூருவுக்கு வந்தார். சிக்கமகளூரு தனியார் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அவர், அங்கிருந்து கார் மூலம் சேதனஹள்ளி எஸ்டேட்டுக்கு சென்றார். பின்னர் அவர் சித்தார்த்தாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் மற்றும் பா.ஜனதாவைச் சேர்ந்த சிலர் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் சித்தார்த்தாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் சித்தார்த்தாவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சட்டனஹள்ளி அருகே சேதனஹள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

    முன்னதாக சித்தார்த்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சித்தார்த்தா மிகவும் எளிமையான மனிதர். அவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளார். அதன்மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது வளர்ச்சி அடையக்கூடிய சூழ்நிலையில் இருந்த சித்தார்த்தா, ஏன் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவருடைய மறைவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சித்தார்த்தாதின் மரணம் அவரது நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பெரிய இழப்பு. ‘காபி டே’ நிறுவனத்தை அவர் உலக அளவில் வளர்த்து கர்நாடகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருடைய மரணம் குறித்து போலீசார் விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×