search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவைப்பு
    X
    தீவைப்பு

    உத்தரபிரதேசத்தில் ஜெய்ஸ்ரீராம் கோ‌ஷம் போட மறுத்த வாலிபர் எரித்து கொலை

    உத்தரபிரதேசத்தில் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் போட மறுத்த வாலிபரை மர்மநபர்கள் தீ வைத்ததில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் சந்தவுலி பகுதியை சேர்ந்தவர் அப்துல்காலிக் (வயது 18).

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவர் சயத்ராஜா பகுதியில் உள்ள துதாரி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அப்துல் காலிக்கை தடுத்து நிறுத்தி ‘ஜெய்ஸ்ரீராம்’ என கோ‌ஷம் போடுமாறு கூறினர் அதற்கு காலிக் மறுத்தார்.

    இதனால் ஆவேசம் அடைந்த கும்பல் அவர் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து விட்டு தப்பி ஓடியது. உடல் முழுவதும் தீ பற்றியதால் அலறிதுடித்த படி காலிக் வீட்டுக்கு ஓடினார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காலிக் உடலில் பற்றிய தீயை அணைத்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார்.

    தன் மகனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலிக்கின் தந்தை ஜில்பிகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் குமார் சிங் தீவிர விசாரணை நடத்தினார்.

    காலிக் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோ‌ஷம் போட மறுத்ததால் தான் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுவதை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் குமார் சிங் மறுத்துள்ளார். காலிக் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்ததாக அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்ததாக காலிக் கூறியதாகவும், ஆனால் அவரது தாயார் வந்து பேசிய பிறகு மர்மநபர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்லச்சொல்லி தாக்கி தீவைத்ததாக மாற்றிக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து எஸ்.பி. சந்தோஷ்குமார் சிங் கூறியதாவது:-

    கும்பல் தாக்கியதாக கூறப்படும் இடத்தில் அதற்கான அடையாளங்கள் இல்லை. அப்பகுதியில் பேப்பர் போடும் தினேஷ் மயூர்யா என்பவர் சம்பவத்தன்று காலிக் தனியாக நின்றதை பார்த்துள்ளார். இந்த சம்பவத்தில் காலிக்கின் குடும்பத்தினர் தவறான தகவல்களை கூறுகின்றனர். காலிக் ஏன் தனக்குத் தானே தீவைத்திருக்கக்கூடாது என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    துதாரி பாலத்தில் வைத்து தான் தன்னை கும்பல் தாக்கி தீவைத்ததாக காலிக் வாக்குமூலத்தில் கூறி இருந்தார். ஆனால் பேப்பர் போடுபவரான மயூர்யா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பாபா மசார் பகுதியில் காலிக் தனியாக நின்றதை பார்த்துள்ளார். இது காலிக்கின் வாக்குமூலத்தில் முரண்பாடாக இருப்பதாக போலீசார் கூறினர். மேலும் சந்தேக எதிரிகள் என குற்றம் சாட்டுபவர்களின் பெயர்களையும் மாற்றி மாற்றி கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் காலிக்கின் குடும்பத்தினர் பொய் சொல்லி ஜோடித்து கதை கூறுவது உறுதியாக தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார் சிங் தெரிவித்தார்.
    Next Story
    ×