search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட கார்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கடந்த 22-ந் தேதி கவிழ்ந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு கோரி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் சார்பில்  முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

    அதை பரிசீலித்த சபாநாயகர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமட்டள்ளி, சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரசில் சேர்ந்த சங்கர் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் கடந்த 25-ந் தேதி தகுதி நீக்கம் செய்தார்.

    சபாநாயகரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, கர்நாடகத்தில் புதிய அரசு அமைக்க பாரதிய ஜனதா முன்வந்தது. அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா 26-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

    அப்போது,  31-ந் தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு அவருக்கு கவர்னர் வஜூபாய் வாலா ‘கெடு’ விதித்தார். ஆனால் 29-ந் தேதியே சட்டசபையில்  மெஜாரிட்டியை  எடியூரப்பா நிரூபித்தார்.

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 11 எம்.எல்.ஏ.க்களையும், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களையும்  முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார்  அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார்.

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விவரம் வருமாறு:-

    1. பிரதாப் கவுடா பட்டீல்

    2. பி.சி.பட்டீல்

    3. சிவராம் ஹெப்பார்

    4. எஸ்.டி.சோமசேகர்

    5. பைரதி பசவராஜ்

    6. ஆனந்த் சிங்

    7. ஆர்.ரோஷன் பெய்க்

    8. எஸ்.முனிரத்னா

    9. கே.சுதாகர்

    10. எம்.டி.பி.நாகராஜ்

    11. ஸ்ரீமந்த் பட்டீல்

    12) ரமேஷ் ஜார்கிகோளி, 13)  மகேஷ் குமட்டள்ளி, 14) சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரசில் சேர்ந்த சங்கர்.

    இவர்கள் அனைவரும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் ஸ்ரீமந்த் பட்டீல் ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை என்ற போதிலும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    14 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி, தற்போதைய 15-வது கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையும் 2023-ம் ஆண்டு வரை தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் தேர்தலில் போட்டியிட முடியாது.

    இந்நிலையில்,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட கார்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×