search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவீந்திரநாத் குமார்
    X
    ரவீந்திரநாத் குமார்

    தேசிய மருத்துவ ஆணைய மசோதா - ஓ.ப.ரவீந்திரநாத்குமார் எதிர்ப்பு

    பாராளுமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு அதிமுக மக்களவை குழுத் தலைவர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் ஓ.ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019-ன் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தேசிய மருத்துவக் கழகம் தன் சட்டபூர்வமான கடமைகளை செய்யத் தவறியதன் காரணமாக திறமையான டாக்டர் ஹர்சவர்தனிடம் சுகாதாரத் துறையை பிரதமர் ஒப்படைத்திருக்கிறார்.

    1994-ல் டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்திய போலியோ சொட்டு மருந்துத் திட்டம் நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக அமைந்ததற்காக பாராட்டுகிறேன்.

    டெல்லிக்குப் பிறகு இந்த திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு 8.8 கோடி மக்கள் (88 மில்லியன்) குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டது.

    மருத்துவத்துறை தற்போது சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள முதுகெலும்புள்ள ஒரு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கிறோம் என்ற சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

    ஊழலில் புரையோடிப் போயிருக்கின்ற மருத்துவத் துறையை தூய்மைப்படுத்த இது உதவும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறப்பான சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற பிரதமரின் கனவு நிறைவேறும்.

    தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைமுறைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்றும், மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் புரட்சித் தலைவி அம்மா எதிர்ப்பு தெரிவித்து வந்ததை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றும், நெக்ஸ்ட் நுழைவுத்தேர்வு கூடாது என்றும் கூறும் எங்களது கட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் கருத்துக்களை பிரதிபலிக்க விரும்புகிறேன். எனது கட்சி இந்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால், நான் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×