search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    மாநிலங்களவையில் சிட்பண்ட் மோசடிகளை தடுக்கும் மசோதா நிறைவேறியது

    பாராளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் சிட்பண்ட் மோசடிகளை தடுக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
    புதுடெல்லி:

    அதிக வட்டி என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் அப்பாவி மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்யும் சிட்பண்ட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக பாராளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் புதிய மசோதா ஒன்றை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. ‘முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா-2019’ எனப்படும் இந்த மசோதா ஏற்கனவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 24-ந் தேதி ஒருமனதாக நிறைவேறியது.

    இதைத்தொடர்ந்து இந்த மசோதாவை நேற்று மாநிலங்களவையில் நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாகூர் தாக்கல் செய்தார். பின்னர் நடந்த விவாதத்தில் கட்சி சார்பின்றி அனைத்து உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    அதன்படி காங்கிரஸ் உறுப்பினர் சுப்புராமி ரெட்டி பேசும்போது, ‘வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மோசமான கட்டத்தை நோக்கி நகர்கின்றன. இதில் ஒரு குழப்பம் நிலவுவதால், இந்த நிறுவனங்கள் சார்ந்த சட்டங்களை அரசு மறுவரையறை செய்ய வேண்டியது அவசியம். எனினும் இந்த நிறுவனங்கள் நமது பொருளாதாரத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்குகின்றன. அனைத்து நிறுவனங்களும் மோசமானவை அல்ல. சில நிறுவனங்கள் சட்டத்துக்கு உட்பட்டு நல்ல முறையில் வர்த்தகம் செய்கின்றன’ என்று கூறினார்.

    இது ஒரு சிறந்த மசோதா எனவும், போலி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் பாராட்டினார். இதைப்போல இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த சமாஜ்வாடி உறுப்பினர் விஷம்பர் பிரசாத் நிஷாத், 1947-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த சிட்பண்ட் மோசடிகள் மற்றும் அதில் ஈடுபட்டவர்களின் விவரங்களை அரசு தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இவ்வாறு உறுப்பினர்களின் விவாதம் அனைத்தும் நிறைவடைந்தபின் மத்திய மந்திரி அனுராக் தாகூர் பதிலளித்து பேசினார். அவர் கூறுகையில், ‘சிட்பண்ட் மோசடி தொடர்பாக ஏற்கனவே இருக்கும் சட்டங்களில் உள்ள இடைவெளிகளை நீக்க அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவினர் அளித்த பரிந்துரைகள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த மசோதா மூலம் ஏழை மக்கள் கடின உழைப்பு மூலம் சேர்த்த பணம் பாதுகாக்கப்படும்’ என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து மசோதா குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. ஏற்கனவே இந்த மசோதா மக்களவையிலும் நிறைவேறி இருப்பதால் இது விரைவில் சட்டமாகிறது.

    சிட்பண்ட் மோசடியில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க இந்த மசோதா வழிசெய்யும். குறிப்பாக சிட்பண்ட் மோசடிதாரர்களுக்கு 1 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
    Next Story
    ×