search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களவையில் ஆசம் கான்
    X
    மக்களவையில் ஆசம் கான்

    பாஜக பெண் எம்.பி.யை ஆபாசமாக வர்ணித்த சமாஜ்வாடி எம்.பி. பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்

    பாஜக பெண் எம்.பி. ரமா தேவியை ஆபாசமாக வர்ணித்ததற்காக சமாஜ்வாடி எம்.பி. ஆசம் கான் பாராளுமன்ற மக்களவையில் இன்று மன்னிப்பு கேட்டார்.
    புதுடெல்லி:

    சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆசம்கான். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார்.

    தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜனதா வேட்பாளரும் நடிகையுமான ஜெயபிரதாவை ஆபாசமாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இதற்காக ஆசம் கான்  மீது தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுத்து இருந்தது.

    இதற்கிடையே, சமீபத்தில் பாராளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.யை கண்ணியமற்ற முறையில் பேசி ஆசம் கான் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

    பாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை மசோதா குறித்து விவாதம் நடந்தபோது சபாநாயகர் ஓம்பிர்லா அவையில் இல்லை. இதனால் மக்களவை தலைவர் இருக்கையில் பா.ஜனதா பெண் எம்.பி.யும், துணை சபாநாயகருமான ரமாதேவி அமர்ந்து இருந்தார்.

    ரமாதேவி - ஆசம் கான்

    அப்போது ஆசம்கான் பேசும்போது, ‘‘நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். எல்லா நேரத்திலும் உங்கள் கண்களை பார்ப்பது போல் உணர்கிறேன்’’ என்ற வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    அவரது இந்த கண்ணியமற்ற பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்சி பேதமின்றி பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

    இந்த விவகாரங்கள் குறித்து பல்வேறு கட்சி எம்.பி.க்களுடன் சபாநாயகர் ஓம்பிர்லா ஆலோசனை நடத்தினார். இந்த சர்ச்சை தொடர்பாக ஆசம் கான் திங்கட்கிழமை ( இன்று) பாராளுமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைதொடர்ந்து, இன்று காலை சபாநாயகர் ஓம் பிர்லாவை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆசம் கான் ஆகியோர் தனியாக சந்தித்துப் பேசினர். பின்னர்,  மக்களவை கூடியபோது உறுப்பினர்கள் அனைவரின் மத்தியிலும் ஆசம் கான் மன்னிப்பு கேட்டார்.
    Next Story
    ×