search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் வளர்ச்சியை பாதிக்கும் - உள்துறை மந்திரி அமித்ஷா கருத்து

    மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் வளர்ச்சியை பாதிக்கும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் ரூ.65ஆயிரம் கோடி மதிப்பில் தொடங்க இருக்கும் 250 தொழில்துறை திட்டங்களை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஏராளமான முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பின்னர் உரையாற்றும் போது அவர் கூறியதாவது:-

    பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் உலக அளவில் முதல் 3 இடங்களுக்குள் கொண்டு வர பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்து உள்ளார். இதுதான் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார வளர்ச்சி இலக்கின் பின்னணியாகும்.

    நாட்டுக்கு பிரதமராகும் பாதை உத்தரபிரதேசம் வழியாக செல்கிறது என நான் கேட்டு இருக்கிறேன். அதைப்போல இந்தியா ரூ.350 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான பாதையும் உத்தரபிரதேசம் வழியாகவே செல்கிறது. இதில் 1 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.70 லட்சம் கோடி) பங்களிப்பை உத்தரபிரதேசம் வழங்கும் என உறுதியாக நம்புகிறேன்.

    மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 14-வது நிதி கமிஷன் அதிகரித்து உள்ளது. உத்தரபிரதேசத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மாநில அரசுடன் இணைந்து முதலீட்டாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி விழித்துக்கொண்டே கனவு காண்கிறார். அவற்றை புரிந்து கொள்வது வரை சிலருக்கு தூக்கம் இல்லை.

    உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்தியதன் மூலம், வளர்ச்சிக்கு இருந்த மிகப்பெரும் தடையை நீக்கி உள்ளார். மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு மோசமாக இருந்தால் வளர்ச்சிக்கு சாத்தியமில்லை.

    யோகி ஆதித்யநாத் - அமித் ஷா

    முதல்-மந்திரியாவார் என யாரும் நினைக்கவில்லை. நிர்வாகத்தில் அவருக்கு அனுபவமும் இல்லை. ஆனால் அர்ப்பணிப்பு, விசுவாசம், கடின உழைப்பு போன்றவற்றை கொண்ட ஒருநபர்தான் உத்தரபிரதேசத்துக்கு தேவை என்ற எங்களின் நோக்கத்தின் அடிப்படையில் யோகி ஆதித்யநாத்துக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினோம். அந்த முடிவு சரியானது என்பதை அவரும் நிரூபித்து வருகிறார். இவ்வாறு அமித்ஷா கூறினார்.



    இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×