search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    விரைவில் செயற்குழு கூடுகிறது - காங்கிரஸ் தலைவர் தேர்வுக்கு ரகசிய ஓட்டெடுப்பு முறை

    டெல்லியில் விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ரகசிய ஓட்டெடுப்பு மூலம் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த மே மாதம் 25-ந்தேதி அவர் பதவி விலகினார்.

    ராகுல் காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமரசம் செய்தனர். ஆனால் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

    ஆனாலும் காங்கிரஸ் புதிய தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. பிரியங்காவை தேர்வு செய்யும் முயற்சிக்கும் ராகுல் காந்தி முட்டுக்கட்டை போட்டார்.

    ராகுல் காந்தி அமெரிக்கா சென்று விட்டார். இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கடந்த 2 மாதமாக தேக்க நிலை காணப்பட்டது. அவர் அமெரிக்காவில் இருந்து தற்போது திரும்பிவிட்டார். இதனால் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் விரைவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரசின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.

    இதற்கிடையே ரகசிய ஓட்டெடுப்பு மூலம் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சோனியா காந்தி

    காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் 4 பேரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வார்கள். அதில் இருந்து ஒருவரை சோனியா காந்தி இறுதியாக முடிவு செய்து அறிவிப்பார்.

    காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் 52 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் தலைவரை தேர்வு செய்வது மற்றவருக்கு தெரியக்கூடாது என்பதற்காக ரகசிய ஓட்டெடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் குறிப்பிட்ட ஒருவரை தேர்வு செய்வதற்கான காரணத்தையும் உறுப்பினர்கள் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் காங்கிரஸ் செயல் தலைவரும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் வகையில் செயல் தலைவர் தேர்வும் நடைபெறுகிறது.
    Next Story
    ×