search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ள நோட்டை மாற்ற முயற்சி
    X
    கள்ள நோட்டை மாற்ற முயற்சி

    கேரளாவில் ஆஸ்பத்திரியில் கள்ள நோட்டை மாற்ற முயற்சி - 5 பேர் கைது

    கேரளாவில் ஆஸ்பத்திரியில் கள்ள நோட்டை மாற்ற முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆற்றிங்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்ரோஸ் என்பவர் சிகிச்சைக்கு சென்றார்.

    சிகிச்சை முடிந்ததும், பத்ரோஸ் சிகிச்சைக்கான செலவு தொகை ரூ.6,500-ஐ ஆஸ்பத்திரி அலுவலகத்தில் செலுத்தினார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டு 3 மற்றும் ஒரு 500 ரூபாய் கொடுத்தார். அதனை வாங்கிப்பார்த்த ஆஸ்பத்திரி காசாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அவர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து அந்த நோட்டுக்களை வாங்கிப் பார்த்தனர். அச்சு அசலாக ஒரிஜினல் நோட்டுகள்போலவே அவை இருந்தன.

    இதையடுத்து வங்கி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அந்த நோட்டுக்கள் சோதனை செய்யப்பட்டது. அப்போது பத்ரோஸ் கொடுத்த ரூ.6,500-ம் கள்ள நோட்டுக்கள் என உறுதி செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பத்ரோஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த பணத்தை குன்னமங்கலத்தைச் சேர்ந்த சமீர் என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்தார். அவரை பொறிவைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி, பத்ரோசை சமீரிடம் பேச வைத்தனர். மேலும் சில லட்சம் கள்ள நோட்டு தேவைப்படுவதாக கூறி சமீரை வரவழைத்தனர். பொறியில் சிக்கிய சமீர், அவரது கூட்டாளிகள் பிரதாபன், அப்துல் வகாப், ரஷீத் ஆகியோரை காட்டிக் கொடுத்தார்.

    இவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கள்ளநோட்டு அச்சடிக்கப் பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின்கள், பிரிண்டர்கள், கம்ப்யூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

    கைதான 5 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. இவர்கள், ரூ.2 ஆயிரம், ரூ.500 மற்றும் ரூ.200 கள்ளநோட்டுக்களை தயாரித்துள்ளனர்.

    இவற்றை மதுக்கடைகளிலேயே அதிகமாக செலவழித்துள்ளனர். போலீசார் புழக்கத்தில் இருக்கும் கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×