search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் முனைப்பில் காங்கிரஸ் - செயற்குழு அவசரமாக கூடுகிறது

    காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்து எடுக்க அக்கட்சியின் செயற்குழு அவசரமாக கூட உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி கடந்த மே மாதம் 25-ந் தேதி ராஜினாமா செய்தார்.

    அவரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமரசம் செய்தனர். ஆனால் தலைவர் பதவியில் நீடிக்க விரும்ப வில்லை என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்தார்.

    ஆனால் காங்கிரஸ் புதிய தலைவராக யாரை தேர்வு செய்வது என்பதில் கடும் இழுபறி நீடிக்கிறது. பிரியங்காவை தலைவராக தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தங்கள் குடும்பத்தை சேர்ந்த யாரையும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என்று ராகுல் கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யமுடியாமல் கடந்த 2 மாதமாக திணறியபடி உள்ளனர்.

    இதற்கிடையே ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதால் தலைவர் தேர்வில் தற்காலிகமாக தேக்கம் காணப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.

    இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்யும்பணி மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதற்காக காங்கிரஸ் செயற் குழு விரைவில் கூடுகிறது.

    புதிய தலைவராக 6 பேரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என்று டெல்லியில் பேசப்படுகிறது. ராகுல் பிடிவாதமாக இருப்பதால் புதிய தலைவராக தேர்வு பெறுவதற்கு சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    சோனியா மற்றும் பிரியங்காவின் ஆதரவு பெற்றவர்தான் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×