search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    சித்தராமையா யோசனையால் ராஜினாமா செய்தோம் - காங். அதிருப்தி எம்எல்ஏ தகவல்

    காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா யோசனையால் ராஜினாமா செய்தோம் அதிருப்தி எம்எல்ஏ கூறியுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சிவராம் ஹெப்பர் கடந்த 6-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மும்பையில் தஞ்சமடைந்திருந்தார்.

    நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில் அவர் நேற்று பெங்களூருக்கு திரும்பினார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் வழி காட்டுதலின் படியே எம்.எல்.ஏ. பதவியை மட்டும் ராஜினாமா செய்திருந்தோம். அதன் பிறகு மும்பை சென்று விட்டோம்.

    பா.ஜ.க.வுடன் நாங்கள் தொடர்பில் இருந்ததில்லை. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் எல்லோரும் இன்னும் காங்கிரசில் தான் இருக்கிறோம். இன்றைக்கும் சித்தராமையா தான் எங்கள் தலைவர்.

    சிறிது நாட்கள் மட்டும் நாங்கள் விலகி இருக்குமாறு சித்தராமையா கூறி இருந்தார். அதன்படி நடந்து கொண்டிருக்கிறோம். சித்தராமையாவின் முடிவின்படி எதிர்காலத்தில் நடந்து கொள்வோம்.

    போர்க்களத்துக்கு வந்த பிறகு சவால்களைக் கண்டு அஞ்ச முடியுமா? சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சபாநாயகர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பதவி நீக்கம் தொடர்பாக எங்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அடுத்த 3, 4 நாட்களுக்குள் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும். ராஜினாமா அங்கீகரிக்கப்பட்ட பிறகு எங்கள் முடிவை அறிவிக்க இருக்கிறோம். நாங்கள் அதிருப்தியாளர்கள் அல்ல.

    மத சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு மீது எங்களுக்கு அதிருப்தி இருந்தது உண்மைதான். அதற்காகத்தான் அரசை விமர்சித்து விட்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த உமேஷ் ஜாதவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது போல, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவையும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

    பா.ஜனதாவில் சேருவது தொடர்பாக வெளியாகி உள்ளது வெறும் வதந்தி தான். அதிருப்தி எம்.எல். ஏ.க்களுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவராம் ஹெப்பாரின் பேட்டிக்கு பதிலடி கொடுத்து சித்தராமையா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதற்கும், ஆட்சியை கவிழ்ப்பதற்கும் நான் தூண்டிவிட்டதாக அதிருப்தி எம்.எல்.ஏ. கூறியதாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தீய நோக்கங்களோடு கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டாகும். ராஜினாமா செய்ததன் காரணம் என்னவென்பது, எஞ்சியுள்ள நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகு தெளிவாகும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×