search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக தம்பதியை நடுரோட்டில் தாக்கும் வீடியோ காட்சி
    X
    தமிழக தம்பதியை நடுரோட்டில் தாக்கும் வீடியோ காட்சி

    வீடியோ - தமிழக தம்பதியை நடுரோட்டில் தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்

    கேரளாவில் தமிழக தம்பதியை நடுரோட்டில் காங்கிரஸ் பிரமுகர் தாக்கிய சம்பவம் குறித்து மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு, ராகுல்காந்தி எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்ட தொகுதி ஆகும். இந்த தொகுதியில் நடுரோட்டில் தமிழக தம்பதி கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பதிவாகி உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை பதறவைப்பதாக உள்ளது.

    வயநாடு பகுதிக்குட்பட்ட கல்பேட்டா அம்பலவயல் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இரவு 11.30 மணி அளவில் அந்த பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் நடந்து செல்கிறார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவர்கள் அருகே வந்து நிற்கிறது.

    அந்த லாரியில் இருந்து இறங்கும் டிரைவர், அந்த தம்பதியை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரிக்கிறார். அவர்களும் அவருக்கு பதில் அளிக்கிறார்கள். அப்போது லாரி டிரைவர் அவர்களை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசுகிறார். திடீரென்று அந்த பெண்ணுடன் வந்த வாலிபரை, லாரி டிரைவர், சரமாரியாக தாக்குகிறார். அதை அந்த பெண் தடுக்க முயன்றபோது அவரை தாக்குகிறார்.

    நடுரோட்டில் இந்த சம்பவம் நடந்தபோது அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். ஆனால் அவர்களில் யாரும் இந்த மனிதாபிமானமற்ற செயலை தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்தபடி இருக்கிறார்கள். அதன்பிறகு லாரி டிரைவர் அங்கிருந்து சென்று விடுகிறார். இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    கடந்த 21-ந்தேதி இரவு நடந்த இந்த தாக்குதல் சம்பவம் நேற்றுதான் கல்பேட்டா போலீசாரின் கவனத்திற்கு சென்றது. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த தம்பதி போலீசில் புகார் செய்யாததால் போலீசார் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதற்கிடையில் இந்த வீடியோ தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. மகளிர் ஆணையத்தின் தலைவி ஜோசப்பின் இது தொடர்பாக விசாரணை நடத்தும் படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து கல்பேட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து நடுரோட்டில் தம்பதி தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணையை தொடங்கினார்கள்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் நடுரோட்டில் கொடூரமாக தாக்கப்பட்டவர்கள் தமிழக தம்பதி என்பதும், கம்பளி விற்பதற்காக சென்ற அவர்களை தாக்கியவர் அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சஜீவானந்த் (வயது 45) என்பதும் தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் கூறும்போது தாக்கப்பட்ட தம்பதி புகார் கொடுக்காததால் விசாரணையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அவர்களை தாக்கிய சஜீவானந்த் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
    Next Story
    ×