search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    கர்நாடகா ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் 17 நாள் காட்சிகள்

    கர்நாடக சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 ஓட்டுகளும், எதிர்த்து 105 ஓட்டுகளும் பெற்றதால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.
    கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா கட்சி பல தடவை முயன்ற பிறகும் இந்த மாதம்தான் வெற்றி கிடைத்துள்ளது.

    ஜூலை 1-ந்தேதி பா.ஜனதா கட்சியினரின் “ஆபரே‌ஷன் கமலா” என்ற திட்டம் தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை 17 நாட்களுக்கு பரபரப்பான திருப்பங்களுடன் கர்நாடகா அரசியலில் குழப்பமும், குதிரை பேரமும், பண பேரமும், பதவி பேரமும், ஆள் கடத்தலும், சிறை வைப்புகளும் நடந்தன.

    மற்றொரு பக்கம் சமரச பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்தன. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் தொண்டர்கள் நெருப்பு மீது நின்றது போன்று துடிதுடித்தபடி அலைந்தனர். இந்த 17 நாள் காட்சிகள் கர்நாடகா அரசியலில் கரைபடிந்தவை.... மறக்க முடியாதவை.... அதை ஒரு கண்ணோட்டமாக பார்க்கலாம்.

    ஜூலை 1:- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனந்தசிங் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். நில பிரச்சினையை அவர் பதவி விலகலுக்கு காரணமாக கூறினாலும் குமாரசாமி மீதுள்ள கோபம்தான் அடிப்படை காரணமாக இருந்தது.

    ஜூலை 6:- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர். அவர்களில் 10 பேர் அன்றே தனி விமானத்தில் புறப்பட்டு மும்பை சென்றனர். மும்பையில் அவர்களை பா.ஜனதா கட்சி தலைவர்கள் சொகுசு ஓட்டலில் தங்க வைத்தனர்.

    ஜூலை 7:- முதல்-மந்திரி குமாரசாமி அந்த சமயத்தில் அமெரிக்கா சென்று இருந்தார். 13 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பற்றி தகவல் அறிந்ததும் அமெரிக்கா சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்து கொண்டு அவசரம் அவசரமாக பெங்களூர் திரும்பினார்.

    ஜூலை 8:- சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ், சங்கர் இருவரும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்தனர். கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து அவர்கள் இதற்கான கடிதத்தை கொடுத்தனர்.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய அமைச்சரவையை மாற்றி அமைக்க குமாரசாமி முடிவு செய்தார். அதற்காக 32 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து குமாரசாமியிடம் கடிதம் கொடுத்தனர்.

    ஜூலை 9:- காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. ரோ‌ஷன்பெய்க் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 20 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பகிரங்கமாக எச்சரித்தனர்.

    ஜூலை 10:- நாகராஜ், சுதாகர் என்ற 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களும் தனி விமானத்தில் மும்பைக்கு பறந்தனர். இதனால் மும்பையில் சிறை வைக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

    சபாநாயகர் ரமேஷ்குமார்

    ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்க மறுத்தார். 3 எம்.எல்.ஏ.க்களின் கடிதம் மட்டுமே சரியானதாக இருப்பதாக தெரிவித்தார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி சட்டத்துக்கு உட்பட்டு ராஜினாமா கடிதம் எழுதவில்லை. எனவே அந்த கடிதங்களை ஏற்க இயலாது என்று சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார்.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமார் மும்பை சென்றார். மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிக்குள் அவர் செல்ல முயன்றபோது மும்பை போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். சிவக்குமாரை சந்திக்க விரும்பவில்லை என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் போலீஸ் கமி‌ஷனரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிவக்குமார் வலுக்கட்டாயமாக மும்பையில் இருந்து பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஜூலை 11:- மும்பையில் தங்கியிருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனு செய்தனர். அதில் அவர்கள், எங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர். அதற்கு பதில் அளித்த சபாநாயகர், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மீது முடிவு எடுக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்று கூறி இருந்தார். இதையடுத்து சுப்ரீம்கோர்ட்டு, 10 எம்.எல்.ஏ.க்களும் புதிய கடிதம் கொடுக்கலாம் என்று கூறியது.

    இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் அதிரடியாக மும்பையில் இருந்து தனி விமானத்தில் பெங்களூர் வந்தனர். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக சட்டசபைக்கு வந்த அவர்கள் புதிதாக ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். பிறகு உடனடியாக அவர்கள் தனி விமானத்தில் மீண்டும் மும்பைக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

    ஜூலை 12:- அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர்களும் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்தன. பதவி தருவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மனம் மாறவில்லை. இதனால் குதிரை பேரம் நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்த நிலையில் சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க போவதாக துணிச்சலுடன் அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர்களும், பா.ஜனதா கட்சி தலைவர்களும் தங்களது எம்.எல்.ஏ.க்களை தனித்தனியே ஆம்னி பஸ்களில் ஏற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். அதுபோல மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களும் பெங்களூர் புறநகரில் உள்ள அதிநவீன சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

    ஜூலை 13:- சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் குமாரசாமியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தீவிரமாக இறங்கினார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பேசினார்கள். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த நாகராஜ் என்பவர் வீட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமார் திடீரென சென்று சமரச பேச்சு நடத்தினார். 12 மணி நேரம் இந்த சமசர பேச்சு நீடித்தது.

    இதைத் தொடர்ந்து நாகராஜ் எம்.எல்.ஏ. மனம் மாறி விட்டதாக தகவல்கள் வெளியானது. அவர் தனது ராஜினாமாவை திரும்ப பெற்றுக் கொண்டு குமாரசாமிக்கு ஆதரவு தெரிவிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனால் மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனம் மாறி குமாரசாமி பக்கம் வந்து விடுவார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இது கர்நாடகா அரசியலில் உச்சக்கட்ட குழப்பத்தை உருவாக்கியது

    ஜூலை 14:- காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகராஜ் மீண்டும் மனம் மாறினார். கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் தனி விமானத்தில் ஏறி மும்பைக்கு பறந்து விட்டார். அதன்பிறகுதான் அவர் சமரசம் ஆகவில்லை. தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.வாக இருப்பது தெரிய வந்தது. இது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஜூலை 15:- கர்நாடக சட்டசபை வழக்கம்போல் கூடியது. அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார் கூறுகையில், குமாரசாமி கொண்டு வந்துள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பு ஜூலை 18-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

    ஜூலை 16:- அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் சபாநாயகர் தரப்பில் ஆஜரான வக்கீல், விதிகளை மீறிய எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனால் கர்நாடகா அரசியலில் பரபரப்பு அதிகரித்தது.

    அன்று இரவு ரோசன் பெய்க் எம்.எல்.ஏ. மும்பைக்கு செல்ல முயன்றார். ஆனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

    ஜூலை 17:- அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் கலந்து கொள்ளும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அது அவர்களது விருப்பம் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் சபாநாயகர் எடுக்கும் முடிவில் தலையிட மாட்டோம் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரால் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை உருவானது. இது கர்நாடக அரசியலை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கியது.

    இந்த நிலையில் ராமலிங்க ரெட்டி எம்.எல்.ஏ. தனது ராஜினாமா முடிவை கைவிட்டார். ஆனால் மும்பையில் தங்கியிருந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக அறிவித்தனர். சபாநாயகர் விடுத்த அழைப்பையும் அவர்கள் புறக்கணித்தனர்.

    ஜூலை 18:- சட்டசபையில் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த தீர்மானம் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் செய்வது தொடங்கியது. அப்போது அன்றே ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறினார்கள். அதை குமாரசாமி ஏற்கவில்லை.

    இதற்கிடையே முதல்-மந்திரி குமாரசாமி தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை 19-ந்தேதி மதியம் 1.30 மணிக்குள் நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார். ஆனால் குமாரசாமி அதை ஏற்கவில்லை. இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற மறுத்தனர். விடிய விடிய அவர்கள் சட்டசபைக்குள் இருந்தனர்.

    ஜூலை 19:- கவர்னரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர்களும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடுவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அன்றும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

    இதையடுத்து அன்று மாலைக்குள் குமாரசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று மீண்டும் கவர்னர் உத்தரவிட்டார். ஆனால் அதையும் குமாரசாமி கண்டுகொள்ளவில்லை. இதனால் எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நீடித்தது. அன்று சட்டசபையை ஒத்திவைத்த சபாநாயகர் மீண்டும் திங்கட்கிழமை (22-ந்தேதி) எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்தார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளி போனது.

    ஜூலை 21:- ஆட்சியை காப்பாற்ற குமாரசாமி கடைசி கட்ட முயற்சியாக மீண்டும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தார். ஆனால் அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ், சங்கர் இருவரும் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். இதில் அவர்கள், குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பு சட்ட விரோதமாக அதிகாரிகளை மாற்றுகிறார். சில கொள்கை முடிவுகளை எடுக்கிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும். அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    ஜூலை 22:- சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் அதை ஏற்கவில்லை. நாளையே விசாரிக்கலாம் என்று மனுவை தள்ளிவைத்தனர். இதற்கிடையே கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நீடித்தது. அன்று ஓட்டெடுப்பை நடத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தீவிரமாக முயன்றனர்.

    மாலை 6 மணிக்கு ஓட்டெப்பு நடந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குமாரசாமி கேட்டுக் கொண்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

    ஜூலை 23:- எம்.எல்.ஏ.க்கள் விவாதம் முடிந்தது. மாலை நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. குமாரசாமிக்கு ஆதரவாக 99 ஓட்டுகளும், எதிர்த்து 105 ஓட்டுகளும் விழுந்தன. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.
    Next Story
    ×