search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    நம்பிக்கை வாக்கெடுப்பு- 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் வழக்கு நாளைக்கு ஒத்தி வைப்பு

    2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் வழக்கை நாளைக்கு தள்ளி வைப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்தனர்.


    கர்நாடக சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ.க் களாக இருக்கும் சங்கர், சுதாகர் இருவரும் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.

    அவர்கள் தங்கள் மனுவில், “கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி மெஜாரிட்டியை இழந்து விட்டது. ஆனால் அவர் சட்டவிதிகளை மீறி அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார். எனவே கர்நாடக சட்டசபையில் குமாரசாமி தனக்கு இருக்கும் மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

    நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் சார்பில் மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி ஆஜராகி வாதாடினார். அவர் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி இன்றே விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆனால் அதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். நாளை (இன்று) இந்த மனு மீதான விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்தனர்.

    அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் சார்பில் ஆஜரான வக்கீல் முகுல்ரோத்தகி கூறுகையில், “கர்நாடக சபாநாயகர் வேண்டுமென்றே நம்பிக்கை வாக்கெடுப்பை காலதாமதம் செய்து வருகிறார். விவாதம் நடப்பதாக தினமும் சொல்கிறார்கள்.

    ஆனால் அதன்பிறகு சட்டசபையை ஒத்திவைத்து விட்டு சென்று விடுகிறார்கள். எனவே சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

    இதையடுத்து சபாநாயகர் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வி ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், “கர்நாடக சட்டசபையில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான எம்.எல்.ஏ.க் கள் விவாதம் நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் அந்த விவாதத்தை முடித்துக் கொள்ள சபாநாயகர் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி இன்று மாலைக்குள் எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நிறைவு பெற்றுவிட்டால் அதன்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். எனவே இதில் சபாநாயகரை குறை சொல்ல இயலாது” என்று வாதிட்டார்.

    அவர் மேலும் வாதாடுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது நீண்டநாள் விவாதம் நடந்ததற்கான வரலாறுகள் உள்ளன. தற்போது விவாதம் சென்று கொண்டிருக்கிறது. இதில் கவர்னர் தலையிட்டு உத்தரவிட அதிகாரம் இல்லை. சபாநாயகரே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார் என்றார்.

    இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வக்கீல் முகுல்ரோத்தகி கூறுகையில், சபாநாயகர் 15 எம்.எல்.ஏ.க்களுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார். அவர்களை தகுதி நீக்கம் செய்யப்போவதாக கூறியிருக்கிறார் என்றார்.

    அதற்கு முதல்-அமைச்சர் குமாரசாமி சார்பில் ஆஜரான வக்கீல் ராஜீவ்தவான் கூறுகையில், இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள்தான் பேச வேண்டியது உள்ளது. இன்று அல்லது நாளை விவாதம் முடிந்து விடும். அதன்பிறகு ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்றார்.

    அப்போது சபாநாயகர் வக்கீல் சிங்வி குறுக்கிட்டு, எம்.எல்.ஏ.க்கள் விவாதம் இன்று முடிந்து விட்டால் இன்றே வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்றார்.

    சபாநாயகர் வக்கீல் சிங்வி தெரிவித்த கருத்துக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான பெஞ்ச் ஏற்றுக் கொண்டது. சபாநாயகர் தரப்பில் குரல் மூலம் உறுதி மொழி தரப்பட்டு இருப்பதால் இன்றே கர்நாடக சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் வழக்கை நாளைக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். எனவே இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாவிட்டால் நாளை இந்த வழக்கு மீண்டும் முக்கியத்துவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×