search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    கர்நாடக அரசியலை பாஜக பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது- குமாரசாமி குற்றச்சாட்டு

    கர்நாடக அரசியலை பா.ஜனதா பாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டதாக முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக அரசியல் சிக்கல் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா கட்சி, கர்நாடக அரசியலை பாதாளத்திற்கு கொண்டு செல்வது மட்டுமின்றி நாட்டில் தவறான அரசியலுக்கு புதிய வடிவம் கொடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. ஆளுங்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எங்கள் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் சிறப்பு விமானத்தில் சென்றது ஊடகங்கள் மூலம் பகிரங்கமாகியுள்ளது.

    சட்டவிரோதமான முறையில் ஆட்சியை பிடிக்க அவசரப்பட்டு வரும் பா.ஜனதா, என்னை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தும்படி கவர்னர் மூலம் பா.ஜனதா எனக்கு கெடு விதிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    பாஜக

    நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளேன். தார்மீகம் குறித்து பேசும் பா.ஜனதா, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை தத்துவத்தை சிதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதை இந்த நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது தான் எனது நோக்கம்.

    இந்த சூழ்நிலையில் எங்களிடம் இருந்து வெளியேறியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று, பா.ஜனதாவினர் எப்படி தங்களை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர் என்பதை கூற வேண்டும். உங்களின் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாம் உட்கார்ந்து அவற்றை சரிசெய்து கொள்ளலாம்.

    ஏனென்றால் அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தின் அடிநாதத்தை ஆட்டிப்படைக்கும், ஜனநாயக முறைப்படி தேர்வான அரசை வீழ்த்த நினைக்கும் கெட்ட சக்திகளிடம் இருந்து அரசை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க நாம் இணைந்து போராடலாம்.

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×