search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம் விலாஸ் பஸ்வானின் இளைய சகோதரர் ராம்சந்திர பஸ்வான்
    X
    ராம் விலாஸ் பஸ்வானின் இளைய சகோதரர் ராம்சந்திர பஸ்வான்

    ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் லோக் ஜனசக்தி எம்.பி. மரணம் - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

    மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரரும், பீகாரைச் சேர்ந்த லோக் ஜனசக்தி எம்.பி.யுமான ராம்சந்திர பஸ்வான் நேற்று மரணமடைந்தார்.
    புதுடெல்லி:

    மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வானின் இளைய சகோதரர் ராம்சந்திர பஸ்வான் (வயது 57). பீகாரின் சமஸ்திபூர் தொகுதியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு கடந்த 12-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார்.

    இந்த தகவலை ராம் விலாஸ் பஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி தலைவர்களில் ஒருவருமான சிராக் பஸ்வான் வருத்தத்துடன் தெரிவித்தார். ராம்சந்திர பஸ்வானின் மரணத்தால் ராம் விலாஸ் பஸ்வான் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் லோக் ஜனசக்தி கட்சியினரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    மரணமடைந்த ராம்சந்திர பஸ்வானுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    ராம்சந்திர பஸ்வானின் மரணத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ஜனாதிபதி தனது டுவிட்டர் தளத்தில், “பீகாரின் சமஸ்திபூர் எம்.பி. ராம்சந்திர பஸ்வானின் மரணத்தை அறிந்து மிகவும் வருந்துகிறேன். பீகார் மக்களின் நல்வாழ்வுக்கு உழைப்பதற்காக தொடர்ந்து அவர் உறுதிபூண்டிருந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் சக எம்.பி.க்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி இருந்தார்.

    இதைப்போல பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக ராம்சந்திர பஸ்வான் அயராது உழைத்து வந்தார். ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைக்காக ஒவ்வொரு மன்றத்திலும் குரல் கொடுத்து வந்தார். அவரது சமூக சேவை முயற்சிகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவரது மரணம் மிகுந்த வலியை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×