search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகமன் பகுதியில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு
    X
    வாகமன் பகுதியில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு

    கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - ஒரே நாளில் 15 செ.மீ. மழை

    கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. பீர்மேடு, கோழிக்கோடு பகுதிகளில் 15 செ.மீ. மழை பதிவானது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது.

    கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

    இதையடுத்து இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் மழை எச்சரிக்கை விடப்பட்டது. இங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைப்படி கேரளாவில் நேற்று மிகப்பலத்த மழை பெய்தது. பீர்மேடு, கோழிக்கோடு பகுதிகளில் 15 செ.மீ. மழை பதிவானது.

    மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் 12 செ.மீ. மழை பெய்தது. சபரிமலையில் 5 செ.மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. நிலம்பூரில் மட்டுமே குறைந்த அளவில் 8 மி.மீ. மழை பெய்திருந்தது.

    இந்த மழை அடுத்த 72 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இடுக்கி, மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களுக்கு தொடர்ந்து மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    கேரளாவின் மலைக்கிராமங்களில் பெய்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகளும் துண்டிக்கப்பட்டன.

    சபரிமலை பம்பை நதியிலும் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அவதிக்கு ஆளானார்கள். சபரிமலை பம்பை நதியோரம் அமைந்திருந்த கடைகளும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது.

    கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழையின் போதும், பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது திரிவேணி நதிப்பாலம் முழுவதும் மணலால் மூடப்பட்டது.

    மழை ஓய்ந்த பின்பு இந்த மணல்மேடுகள் அப்புறப்படுத்தப்பட்டு நதிக்கரையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த மணலை அப்புறப்படுத்துவதில் தேவசம் போர்டுக்கும், வனத்துறைக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மணல் அகற்றப்படாமல் நதிக்கரையோரமே இருந்தது. லட்சக்கணக்கில் மதிப்புள்ள இந்த மணல்மேடுகள் அனைத்தும் நேற்றைய மழையில் மீண்டும் பம்பை நதியில் அடித்துச் செல்லப்பட்டது.

    கேரளாவில் பெய்த மழையில் நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். கொல்லம் அஞ்சனமுக்கு பகுதியில் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் திலீப்குமார் (வயது 54) என்பவர் பலியானார். திருவல்லாவில் ஓடையில் தவறி விழுந்து கோஷிவர்கீஸ் (54) என்பவரும், தலச்சேரியில் குளத்தில் விழுந்து அத்தனான் (17) என்பவரும் பலியானார்கள்.

    இதுபோல கடலுக்கு சென்ற மீனவர்கள் ஜோன் போஸ்கோ (46), சகாயராஜ் (32), லூர்துராஜ் (50), யேசுதாசன் (55), ஆண்டனி (50), லூயிஸ் (53), பென்னி (33) ஆகியோர் மாயமானார்கள். அவர்களை கடலோர காவல்படையினர் தேடி வருகிறார்கள்.


    Next Story
    ×