search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதித்ய தாக்கரே
    X
    ஆதித்ய தாக்கரே

    நான் முதல்-மந்திரி ஆவதை மக்கள் முடிவு செய்வார்கள்- ஆதித்ய தாக்கரே

    நான் முதல்-மந்திரி ஆக வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அதைப்பற்றி நான் பேச முடியாது என்று ஆதித்ய தாக்கரே பேசினார்.
    மும்பை :

    மராட்டியத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது வீசிய மோடி அலையால் பா.ஜனதா, சிவசேனாவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் சிவசேனா, பா.ஜனதாவிடம் பெரியஅண்ணன் அந்தஸ்தை இழந்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே மராட்டியத்தில் பா.ஜனதாவை விட நாங்கள் பெரியவர்கள் என்பதை நிரூபிக்க சிவசேனா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக அந்த கட்சி வருகிற சட்டசபை தேர்தலின் போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் 29 வயது மகன் ஆதித்ய தாக்கரேயை களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆதித்ய தாக்கரே சிவ்ரி அல்லது ஒர்லி தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ஆதித்ய தாக்கரே ‘ஜன் ஆசிர்வாத் யாத்ரா' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அவர் மாநிலம் முழுவதும் மக்களை சந்தித்து பேசுகிறார். இதன் ஒரு பகுதியாக ஆதித்ய தாக்கரே ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பச்சோரா பகுதிக்கு சென்று இருந்தார்.

    அங்கு நடந்த விழாவில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசும்போது,

    ‘‘சட்டசபையில் இருந்து ஆதித்ய தாக்கரே மாநிலத்தை வழிநடத்த வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அவரே மராட்டியத்தின் எதிர்காலம் எனவும் நம்புகின்றனர்’’ என்றார்.

    இதையடுத்து பேசிய பச்சோரா எம்.எல்.ஏ. கிஷோர் பாட்டீல் கூறும்போது, ‘‘சட்டசபையில் காவி கொடி பறக்கும். அப்போது இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி ஆவதை யாரும் தடுக்க முடியாது’’ என்றார்.

    சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே மாணவர்களுடன் உரையாடிய போது எடுத்தபடம்.

    விழாவில் ஆதித்ய தாக்கரே பேசியதாவது:-

    தேர்தலுக்காகவோ, பதவி பெறுவதற்காகவோ அல்லது வேறு எதுவும் ஆதாயத்திற்காகவோ நான் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவில்லை. புதிய மராட்டியத்தை உருவாக்கவே இந்த பயணத்தை தொடங்கி உள்ளேன். இதுவே அதற்கான சரியான தருணம்.

    சிவசேனா வலுவாக உள்ள மற்றும் இல்லாத இடங்களுக்கும், எல்லா கிராமங்களுக்கும் செல்வேன். மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காவி கொடியை கொண்டு செல்லவே இந்த பயணம். ஓட்டுக்காக இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை. புனித பயணமாகவே இந்த பயணத்தை கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிலையில் துலேயில் நடந்த யாத்திரையின்போது ஆதித்ய தாக்கரே, “நான் முதல்-மந்திரி ஆக வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அதைப்பற்றி நான் பேச முடியாது. ஏனென்றால், அது எனது கையில் இல்லை. சிவசேனாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எனது கையில் உள்ளது. மக்களின் குரலை கேட்பது தான் எனது முதல் கடமை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுடன் நிற்கும் ஒரே கட்சி சிவசேனா தான்” என்றார்.

    பின்னர் துலே நகரில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, இளைஞர்கள் சந்திக்கும் கல்வி பிரச்சினைகளை களைய கல்வி மந்திரியாக பணியாற்ற விரும்புகிறீர்களா? என்று ஒரு மாணவர் கேட்டார்.

    அதற்கு பதிலளித்த ஆதித்ய தாக்கரே, “உள்துறை தான் மிக முக்கியமான இலாகாவாக கருதப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தை பார்க்கும் போது, உள்துறையை போல கல்வி துறையும் முக்கியமானது. எனவே நிச்சயம் கல்வி துறையில் பணியாற்ற விரும்புகிறேன்” என்றார்.
    Next Story
    ×