search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கேரளாவில் ரெட் அலர்ட் - அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

    கேரளாவின் கோட்டயம், இடுக்கி, பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிகப் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஜூன் மாதம் கண்ணாமூச்சி காட்டிய தென்மேற்கு பருவமழை ஜூலை மாதம் தொடங்கிய பின்பு தீவிரம் அடைந்துள்ளது.

    கேரளாவின் கோட்டயம், இடுக்கி, பத்தினம் திட்டா ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிகப் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 மாவட்டங்களில் அதிகபட்சம் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து இந்த மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாலுகா வாரியாக கட்டுப்பாட்டு அறைகளும், நிவாரண முகாம்களும் திறக்கப்பட்டுள்ளன.

    நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வரும்படியும் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    இதுபோல நாளை (சனிக்கிழமை) எர்ணாகுளம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மழை எச்சரிக்கையும், திங்கட்கிழமை (22-ந்தேதி) இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள்நிற மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    மழை எச்சரிக்கை குறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கேட்டு பொதுமக்கள் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மாநில அரசின் பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் மாநில அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    Next Story
    ×