search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்கள்
    X
    சட்டசபையில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்கள்

    உச்சகட்டத்தில் கர்நாடக அரசியல் குழப்பம்- சட்டசபையில் தூங்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்

    கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபையிலேயே நேற்று இரவு தூங்கினர். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளால் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்றும், அதேசமயம் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து,  சபாநாயகர் அறிவித்தபடி, கர்நாடக சட்டசபை நேற்று (ஜூலை 18) முற்பகல் 11:15 மணிக்கு கூடியது. ஆளும் கூட்டணியான காங்கிரஸ், ம.ஜ.த.வினரின் கூச்சல், குழப்பத்தால், நம்பிக்கை கோரும் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. நேற்று ஒரே நாளில், மூன்று முறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

    இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது. சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேற மறுத்துவிட்டனர். நேற்று இரவு சட்டசபையிலேயே தூங்கினர்.

    “நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த கோரி பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சட்டசபை கூட்ட அரங்கத்திற்குள்ளேயே இரவு முழுவதும் இருப்பார்கள்” என்று எடியூரப்பா அறிவித்தார். அதன்படி அக்கட்சி உறுப்பினர்கள் கூட்ட அரங்கத்திலேயே படுத்து தூங்கினர். 

    பாஜக எம்எல்ஏக்கள்

    இன்று காலை எழுந்து, சட்டசபை வளாகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். பின்னர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளுக்கு தயாராகினர்.

    இன்று நண்பகல் 1:30 மணிக்குள், சட்டசபையில் கூட்டணி அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் குமாரசாமிக்கு, கவர்னர் கடிதம் அனுப்பி நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார். இதனால், குமாரசாமி அரசு தப்பிக்குமா? என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும். 
    Next Story
    ×