search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகைப்படத்தை காட்டும் அமைச்சர் சிவகுமார்
    X
    புகைப்படத்தை காட்டும் அமைச்சர் சிவகுமார்

    எம்எல்ஏக்களை கடத்தி வைத்துள்ளதாக காங்கிரஸ் புகார்- கர்நாடக சட்டசபையில் அமளி

    தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் கடத்திவைத்துள்ளார்கள் என காங்கிரஸ் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, கர்நாடக சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே பிரச்சனைகளை சந்தித்து வந்தது. 

    மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருவதாலும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. அரசை கவிழ்ப்பதற்காக அவ்வப்போது காய்களை நகர்த்தி வந்ததாலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முதல்-மந்திரி குமாரசாமி எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இருக்கவேண்டிய சூழ்நிலை  இருந்தது.
     
    இதற்கிடையே, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அலுவலகத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்துவிட்டு பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினார்கள். ஆனால் அவற்றை சபாநாயகர் ரமேஷ்குமார் இதுவரை ஏற்கவில்லை. அத்துடன் மந்திரிகளாக இருந்த இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக பக்கம் சாய்ந்தனர்.  இதனால் கர்நாடக அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்தது. 

    தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி 15 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜினாமா கடிதங்களை ஏற்கும்படி  சபாநாயகருக்கு உத்தர விட முடியாது என்று கூறிவிட்டது. அதேசமயம், சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும்படி அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. 

    இந்த உத்தரவால் ஆறுதல் அடைந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். எனவே, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 



    இந்நிலையில், இன்று காலை கர்நாடக சட்டசபை கூடியதும் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல் மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். பின்னர் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. 

    விவாதம் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகுமார் பேசுகையில், பாஜகவினர் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை கடத்திச் சென்று மருத்துவமனையில் வைத்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.

    அதற்கு ஆதாரமாக, காங்கிரஸ் எம் எல் ஏ ஸ்ரீமந்த் படேல் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள், பத்திரிகை செய்திகள், விமான டிக்கெட்டுகளை ஆதாரமாக காட்டினார். தொடர்ந்து பேசிய அவர் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி நிலவியது.
    Next Story
    ×