search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா, குமாரசாமி
    X
    எடியூரப்பா, குமாரசாமி

    கதிகலங்கி கிடக்கும் கர்நாடக அரசியல்

    கர்நாடகாவில் அரசுக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த பின்னர் அரசியல் குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் கர்நாடகாவின் முந்தைய அரசியல் பின்னணியை பார்ப்போம்.
    கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணியின் குமாரசாமி தலைமையிலான 14 மாதகால ஆட்சி பறிபோகக்கூடிய நிலையை எட்டியுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் குமாரசாமி முதல்வராக தொடர்வாரா? இல்லையா? என்பது இன்று (வியாழக்கிழமை) நடக்கவுள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் தெரிந்துவிடும்.

    மே 2018 கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பை தராமல் தொங்கு சட்டசபைக்கு வித்திட்டுவிட்டனர்.

    பாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், காங்கிரசுக்கு 79 இடங்களும், ம.ஜ.க.வுக்கு 37 இடங்களும் எனத் தீர்ப்பு வழங்கினர்.

    இதில் தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 8 இடங்கள் தேவைப்பட்டது. அந்த 8 இடங்களை எட்டிப்பிடிக்க பா.ஜ.க. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைபேசி வாங்கி விடுமோ என்ற அச்சத்தில் காங்கிரசின் அகில இந்திய தலைமை வெறும் 37 இடங்களே பெற்றிருந்த ம.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தந்தது.

    இந்த வகையில் குமாரசாமி தலைமையில் இரு கட்சிகளும் கொண்ட கூட்டணி மந்திரிசபை பதவி ஏற்றது. அப்போது முதலே பதவி, அதிகாரப் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. மிகக் குறைந்த இடங்களே பெற்றிருந்த ம.ஜ.க. முதல்-அமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டதோடு முக்கிய இலாகாகளையும் தன்வசமே எடுத்துக்கொள்வது அநீதி என காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. காங்கிரசின் துணை முதல்வரான ஜி.பரமேஸ்வரன், “குமாரசாமி ஆட்சி நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை” என்று வெளிப்படையாகவே கொந்தளித்தார்.

    காங்கிரசிலிருந்து 13 பேரும், ம.ஜ.க. விலிருந்து 3 பேரும், சுயேச்சைகள் 2 பேரும் ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய கூட்டணி அரசின் எண்ணிக்கை பலம் 119-ல் இருந்து 101 ஆக குறைந்துவிட்டது. இதன் மூலம் பெரும்பான்மை பலத்தை ஆளும்தரப்பு இழந்துவிட்டது. ஆனால், அதே சமயம் சுயேச்சைகள் ராஜினாமாவை மட்டுமே சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார். இரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்கவில்லை. இந்த எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்கு வரும்படியாக அந்த கட்சிகளின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன்படி அவர்கள் சட்டசபைக்கு வராமல் தவிர்த்துள்ளதன் மூலம் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு வழிபிறக்கிறது. எனவே தான் அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பு ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு அவகாசம் தரும் விதத்தில் சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராஜினாமா செய்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்தன. ஆனால், அந்த சமாதானத்திற்கு பலன்கிட்டவில்லை.

    குமாரசாமி

    தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும்படி உத்தரவிட வேண்டும் என அதிருப்தியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால், கர்நாடக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக்சிங்வி, “ராஜினாமா செய்யும் சட்டசபை உறுப்பினர்களை முதலில் விசாரணை செய்யும் உரிமை சபாநாயகருக்கே உண்டு என அரசியலமைப்பு சட்டம் 190 விதி சொல்கிறது. இவர்கள் சபாநாயகரை சந்திக்க முயற்சிக்காமல் நீதிமன்றத்தை அணுகியுள்ளதை ஏற்க கூடாது” என வாதிட்டார். அதை ஏற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட அமர்வு, “சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது. அதே சமயம் சபாநாயகர் எடுக்கும் முடிவானது அரசியல்சட்டத்திற்கு உட்பட்டது தானா என்பதை நாங்கள் பார்த்துவிட்டுத் தான் முடிவு சொல்ல முடியும்” என்று கூறிவிட்டது.

    நேற்று இந்த வழக்கை மீண்டும் உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, “சபாநாயகருக்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிவு எடுங்கள் என நிர்ப்பந்திக்க முடியாது. முடிவெடுக்க பொருத்தமானதாக தான் கருதும் காலவரைக்குள் சபாநாயகர் முடிவு எடுப்பார். அதேபோல அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்றும் நாங்கள் கட்டாயப் படுத்த முடியாது. விருப்பப்பட்டவர்கள் பங்கேற்கலாம்” என்று கூறியுள்ளது.

    இதற்கு சபாநாயகர், நீதிமன்றத் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக நான் முடிவு எடுக்க மாட்டேன். அரசியல் அமைப்பு சட்ட பிரிவுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், லோக்பால் அமைப் பின் சட்டப் பிரிவுகள் போன்றவற்றை வழிகாட்டியாகக் கொண்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டே முடிவு எடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

    ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களோ, “நாங்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிச்சயமாக கலந்துகொள்ளமாட்டோம்” என தெரிவித்துள்ளனர். ஆனால், அதிருப்தி எம்.எல். ஏ.க்களில் ஒருவரான ராமலிங்க ரெட்டி, “நான் என்றுமே காங்கிரஸ்காரன். சபாநாயகரை சந்திப்பேன்” எனக் கூறியுள்ளார்.

    பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, “இந்த தீர்ப்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி. குமாரசாமி போக வேண்டிய நேரம் வந்துவிட்டது” என கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவரான தினேஷ் குண்டுராவ் நீதிமன்றத் தீர்ப்பு ஒரு தவறான முன் உதாரணமாகும். சட்டமன்ற கொறடா உத்தரவுகளை மீறுவதற்கு இது வழிவகுக்கும். இது சட்டசபை அதிகாரத்திற்குள் நீதிமன்றம் ஆக்கிரமிப்பது போல உள்ளது என தெரிவித்துள்ளார்.

    கர்நாடகாவில் தேவேகவுடா குடும்ப அரசியல் மிகவும் பிரசித்தி பெற்றது. குமாரசாமி முதல்வரான போது அவரது தந்தை தேவேகவுடா பாராளுமன்ற உறுப்பினர். குமாரசாமியின் மந்திரி சபையில் அவரது சகோதரர் ரேவண்ணா பொதுப்பணித்துறை அமைச்சரானார். இவரது தலையீடுகளும், அதிகாரமும் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக காயப்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன. குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும் எம்.எல்.ஏ.வாக இருந்தார். மற்றொரு உறவினரான பாலகிருஷ்ணா போக்குவரத்து துறை அமைச்சர். இத்துடன் மகன் நிகில் கவுடாவையும் பாராளுமன்றத்திற்கு போட்டியிட வைத்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதியை ம.ஜ.க. அலட்சியப்படுத்தியதாகவும், அவர்கள் மக்களுக்கு எதுவும் அரசிடமிருந்து பெற்றுத்தர முடியவில்லை என்றும் அடிக்கடி புகார் எழுந்தன.

    குமாரசாமி, சித்தராமையா, தேவேகவுடா

    2004-லும் இதேபோல தொங்கு சட்ட சபையே உருவானது. அன்று காங்கிரஸ் தரம்சிங் தலைமையில் ஆட்சி அமைக்கவும், கூட்டணி மந்திரி சபையில் இடம் பெறவும் குமாரசாமி உடன்பட்டார். ஆனால், இரண்டே ஆண்டுகள்தான் காங்கிரசை ஆட்சி செய்ய அனுமதித்தார். காங்கிரசை கவிழ்த்த உடனே பா.ஜ.க.வுடன் கூட்டு கண்டார். மீதி இருக்கும் ஆட்சி காலத்தை சரிபாதியாக பிரித்து இரு கட்சிகளும் ஆள்வது என ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி முதல் பாதி காலத்தை குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி செய்தார். பிறகு எடியூரப்பாவுக்கான காலம் வந்தவுடன் ஒப்பந்தப்படி ஆதரவு தர மறுத்தார். அதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று எடியூரப்பாவுக்கு ஆதரவு தருவதாகக் கூறினார். ஆனால், எடியூரப்பா பதவி ஏற்ற ஒரே வாரத்தில் ஆதரவை வாபஸ் வாங்கி கவிழ்த்துவிட்டார். இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு அனுதாப அலை உருவாகி 2008-ல் பா.ஜ.க. வெற்றி பெற்று எடியூரப்பா முதல்வரானார்.

    இந்த பின்னணியில் வைத்துப்பார்க்கும் போது காங்கிரஸ், ம.ஜ.க. கூட்டணி அதிக காலம் தாக்குப் பிடிக்காது என்று எல்லோரும் எதிர்பார்த்தது தான். உண்மையில் காங்கிரசுக்கு, ம.ஜ.க. தான் கர்நாடகத்தை பொறுத்தவரை உண்மையான எதிரி. பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரசுக்கு விழ வேண்டிய மதசார்பற்றவர்களின் ஓட்டுகளைத் தான் ம.ஜ.க. பங்குபோடுகிறது. அதே சமயம் அது மதசார்பற்ற கொள்கையை கைகழுவி பா.ஜ.க.வுடனும் கைகோர்க்க தயங்காது என்பதை நிரூபித்த கட்சியாகும். ஆக, காங்கிரஸ், ம.ஜ.க. கூட்டணி என்பது, “கூடா நட்பு, பொருந்தா கூட்டணி” என்று அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளுக்கு இடையிலான உறவு என்பது பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த தோல்வியை அடுத்து அதிகமாகிவிட்டது. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பா.ஜ.க.விற்கு இது சாதகமாகிவிட்டது.

    தொங்கு சட்டசபை என்பது கர்நாடகாவிற்கு புதிதல்ல. 2008-ல் பா.ஜ.க. 110 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதே சமயம் சுயேட்சைகள் 5 பேர் ஆதரவு கிடைத்தது. இதுவே ஆட்சி அமைக்க போதுமானது என்றாலும் எடியூரப்பா, ம.ஜ.க.விலிருந்து 4 எம்.எல்.ஏ.க்களையும், காங்கிரசிலிருந்து 3 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கியதன் மூலம் தன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். இந்த ராஜினாமா நாடகத்திற்கு காரணம், கட்சித் தாவல் சட்டப்படி கட்சி தாவும் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோவதோடு அவர்கள் மீண்டும் தேர்தலில் 6 ஆண்டுகள் போட்டியிட முடியாது. அதனால்தான் இப்படி குறுக்கு வழியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வைக்கப்படுகின்றனர்.

    தற்போது எம்.எல்.ஏ.க்கள் ராஜினா மாவின் பின்னணியில் பா.ஜ.க.வின் 1000 கோடி ரூபாய் பேர அரசியல் உள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.

    ஆனால், அதே சமயம், “கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவிற்கு ராகுல்காந்தி காந்தியே காரணம். அவர் தான் முதன்முதலில் ராஜினாமா நாடகத்தை தொடங்கி வைத்தார். இதனால்தான், இனி காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் இல்லை என பல பேர் ராஜினாமா செய்கின்றனர்” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

    ஆனால், “பா.ஜ.க. செய்வது ஜனநாயகப் படுகொலை, குதிரை பேர அரசியலை நிறுத்துங்கள்” என ராகுல்காந்தி, சோனியா உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பினார்கள்.

    ஓட்டுப்போட்ட மக்கள், தங்கள் தீர்ப்பை மீறி நடக்கும் இந்த மாதிரியான கூத்துகளை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியின்றி நிர்கதியாக்கப்பட்டுள்ளனர் என்பது தான் கவலைக்குரியது.
    Next Story
    ×