search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியீடு - தமிழுக்கு இடமில்லை

    சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட்டன. இதில் தமிழ் இடம்பெறாததால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
    சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் மிகப்பெரும் ஆதரவு காணப்பட்டது.

    அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்ற தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

    இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் கட்டிடம் ஒன்றை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். அப்போது கன்னடம், அசாமீஸ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான 100 தீர்ப்புகளை நீதிபதி பாப்டே அவரிடம் வழங்கினார்.

    இந்த தீர்ப்புகளின் மொழிபெயர்ப்பை ஜனாதிபதி வெளியிட்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான 100 வழக்குகளின் தீர்ப்பின் மொழி பெயர்ப்புகளை பெற்றுக்கொண்டு, வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது.

    இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளில் தற்போது தீர்ப்புகளை வாசிக்க முடியும். ஆங்கிலம் தெரியாத லட்சக்கணக்கான சக குடிமக்களும் இந்த தீர்ப்புகளை அணுக முடியும்.

    இதைப்போல 31 நீதிபதிகள் கொண்ட முழு பலத்துடன் சுப்ரீம் கோர்ட் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் கொலீஜியம் மற்றும் மத்திய அரசை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அரசியல் சாசனத்துக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தலை சுப்ரீம் கோர்ட்டு தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.

    மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நேற்று வெளியிடப்பட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மொழி பெயர்ப்புகளில் தமிழ் இடம் பெறவில்லை. இது தமிழர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×