search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி சிவா- நவநீத கிருஷ்ணன்
    X
    திருச்சி சிவா- நவநீத கிருஷ்ணன்

    தமிழில் தபால் துறை தேர்வை நடத்த வேண்டும்- பாராளுமன்றத்தில் அதிமுக, திமுக வலியுறுத்தல்

    மத்திய அரசு சமீபத்தில் நடத்திய தபால் துறை தேர்வை ரத்து செய்துவிட்டு, தமிழில் தேர்வை நடத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
    புதுடெல்லி:

    தபால் துறை காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வின் முதல் தாளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விவகாரத்தை தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் இன்று எழுப்பினர். 

    இது தொடர்பாக ஜீரோ அவரில் அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் பேசுகையில், “கிராமப் புறங்களில் காலியாக உள்ள தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் வினாக்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழில் கேள்விகள் இடம்பெறவில்லை. எனவே, நேற்று நடந்த தபால் துறை தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ் மொழியில் புதிதாக தேர்வு நடத்தப்பட வேண்டும்” என்றார்.

    திமுக எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, “தபால் துறை தேர்வு தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் அனுப்பி உள்ள சுற்றறிக்கை தமிழ்நாட்டில் வாழும் இளைஞர்கள் மனதில் போராட்ட எண்ணத்தை தூண்டி உள்ளது. இதற்கு முன்னதாக, இந்த தேர்வுகள் ஆங்கிலம், இந்தி மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்தப்பட்டது. அதைத்தான் இப்போது மாற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தும்படி கூறப்பட்டுள்ளது. 
    பாராளுமன்றம்
    ஏற்கனவே மத்திய அரசு வேலைகளில் குறிப்பாக ரெயில்வே துறையில் வேலைகளில் எங்கள் மாணவர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். எனவே, மத்திய அரசு தனது சுற்றறிக்கையை திரும்ப பெறுவதுடன், பிற மாநில மொழிகளில் தேர்வை நடத்தவேண்டும்” என்றார்.

    அதன்பின்னர் பேசிய சபாநாயகர் வெங்கையா நாயுடு, ‘உறுப்பினர்கள் எழுப்பிய இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுகுறித்து மாநிலங்களவை பாஜக தலைவர் தாவர்சந்த் கெலாட் ஆராய வேண்டும். நான் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மந்திரியிடம் கேவிட்டேன், நீங்களும் மந்திரியிடம் பேசுங்கள்” என கேட்டுக்கொண்டார். 
    Next Story
    ×