search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் - எடியூரப்பா திட்டவட்ட அறிவிப்பு

    கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்றும் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார். குமாரசாமி தனது நிலையை உணர்ந்து தாமாக முன் வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
    பெங்களூர்:

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கூட்டணி கட்சியில் இருந்த 16 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்து கவிழும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற ஒரு வாரமாக தீவிரமாக போராடி வருகிறார்கள். சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்காததால் குமாரசாமி அரசு தப்பி பிழைத்து வருகிறது. இதை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகு குமாரசாமி ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. என்றாலும் முதல்-மந்திரி குமாரசாமி சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்று சவால் விடுத்து இருந்தார்.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்து மீண்டும் அழைத்து வந்து விடலாம் என்று குமாரசாமி மலைபோல் நம்பி இருந்தார். ஆனால் அவரது நம்பிக்கை நேற்று இடிந்து தகர்ந்து நொறுங்கி போனது. அவரது சமரச முயற்சிகள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை.

    நேற்று மாலை அவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ராமலிங்க ரெட்டியை சந்தித்து பேசினார். ஆனால் ராமலிங்க ரெட்டி சமரசம் ஆகவில்லை. அவர் வெளிப்படையாகவே காங்கிரசை எதிர்ப்பதாக கூறி விட்டார்.

    அதுபோல அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான நாகராஜை காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் சந்தித்து சமரசம் பேசினார். சுமார் 15 மணி நேரம் சமரச பேச்சு நடந்தது. ஆனால் நேற்று திடீரென அவர் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு மும்பைக்கு பறந்து விட்டார்.

    மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மும்பைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களும் சமரசம் செய்து பார்த்து விட்டு பலன் கிடைக்காததால் திரும்பி சென்று விட்டனர்.

    தற்போதைய சூழ்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் தங்களது ராஜினாமா முடிவில் மிகவும் உறுதியாக உள்ளனர். மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியபடி உள்ளனர். இதனால் இனி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நீடிக்காது என்ற நிலை உருவாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 105 எம்.எல்.ஏ.க்களுடன் இருக்கும் பா.ஜனதாவுக்கு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் 107 எம்.எல்ஏ.க்கள் பலத்துடன் ஆட்சி அமைத்து விட முடியும் என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    புதிய ஆட்சியை மலர செய்வதற்காக இன்றே கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் வலியுறுத்தியபடி உள்ளனர். குமாரசாமி அதை ஏற்பாரா? என்று தெரியவில்லை. இது தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமாரசாமி தனக்கு மெஜாரிட்டி இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதே உண்மை நிலையாகும். அவருக்கு மெஜாரிட்டி இருந்தால் திங்கட்கிழமையே (இன்று) அவர் சட்டசபையில் அதை நிரூபித்து காட்ட வேண்டும்.

    கர்நாடகாவில் தற்போது பா.ஜனதாவுக்கு சாதகமான நிலை உருவாகி உள்ளது. புதிய ஆட்சி அமைக்க பா.ஜனதா கட்சி நெருங்கி விட்டது. எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. விரைவில் கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமையும்.

    இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி மலர்ந்து விட்டதை நீங்கள் பார்ப்பீர்கள். இதை குமாரசாமி உணர வேண்டும். தனது நிலையை உணர்ந்து அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து தாமாக முன் வந்து ராஜினாமா செய்ய வேண்டும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    கர்நாடக மாநில பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான ஈஸ்வரப்பா கூறுகையில், “குமாரசாமி மெஜாரிட்டியை இழந்து விட்டார். அவர் இனி பதவியில் நீடிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவர் ராஜினாமா செய்யும் வரை சட்டசபையை செயல்பட விட மாட்டோம்” என்றார்.

    நேற்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூர் புறநகரில் உள்ள பண்ணை வீட்டில் நடந்தது. அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கட்டுகோப்புடன் செயல்பட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் சித்தராமையா தலைமையில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலில் நடந்தது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இனி சமரசம் செய்து அழைத்து வர முடியாது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இனி குமாரசாமிக்கு ஆதரவு கொடுக்காமல் எதிர்க்கட்சி வரிசையில் அமரலாமா? என்பது பற்றியும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. குமாரசாமி அவரது குடும்பத்தினர் ஆட்சியை நடத்தவிடாமல் தொல்லை கொடுப்பது பற்றியும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    எனவே கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி எந்த நேரத்திலும் உடையும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×