
புதுடெல்லி:
இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற மோடி மக்கள் நலனுக்காக பெருந்திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பாக முதல் 100 நாளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை தயார் செய்யுமாறு அனைத்து துறையினருக்கும் உத்தர விட்டிருந்தார். அதன்படி புதிய திட்டங்களாக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஒவ்வொரு துறை மந்திரிகள், உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். இதில் பல்வேறு திட்டங்களுக்கு செயல் வடிவம் தயாரிக்கப்பட்டது.
பின்னர் இந்த திட்டங்களில் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன்படி 167 திட்டங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல் 100 நாட்களுக்குள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய திட்டங்களின் தீவிரத்தை உணர்ந்து அவற்றை செயல்படுத்தும் விதம் குறித்து மந்திரி சபை செயலாளர் நேரடியாக கண்காணித்து வருகிறார். இதற்காக திட்டங்களை செயல்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை கேட்டுள்ளனர்.
அதன்படி ஒவ்வொரு துறைசெயலாளரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் வார அறிக்கையை சமர்பிக்க வேண்டும். அவற்றை மந்திரி சபை செயலாளர் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்வார்.
100 நாள் செயல் திட்டத்தில் முக்கியமாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 3 லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல கலாசார துறை மூலம் புதிய அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் கட்டும் பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 100 நாள் செயல் திட்டத்தை செயல் படுத்துவதில் எந்த தாமதமும் இருக்க கூடாது என்றும் நேரத்தை வீணாக்க கூடாது. என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் குறித்து பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே தயாரிப்புகள் நடந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக மார்ச் மாதம் முதலே மந்திரிகள் அனைவரும் பிரசாரத்துக்கு சென்று விட்டனர்.
இதனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே 100 நாள் செயல்திட்டத்துக்கான வரைவு பணிகள் தொடங்கி நடந்துள்ளது.
ஏழை மக்களை முன்னேற்றும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் அனைத்து துறைகளின் தலைவர்களும் இத்திட்டங்களை இலக்காக கொண்டு பணியாற்றி வருவதாகவும் கூறினர்.