search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களை படத்தில் காணலாம்
    X
    கைதானவர்களை படத்தில் காணலாம்

    பாபநாசம் பட பாணியில் வாலிபரை கொலை - 5 பேர் கைது

    திருவனந்தபுரம் அருகே பாபநாசம் பட பாணியில் வாலிபரை கொலை செய்த 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கும்பளம் பகுதியை சேர்ந்தவர் வித்யன். இவரது மனைவி சிந்து. இந்த தம்பதியின் மகன் அர்ஜுன் (வயது 20).

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவு நேரத்தில் வெளியில் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் அர்ஜுன் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடினார்கள். அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது ஒலித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அர்ஜுன் செல்போனை எடுத்து பேசவில்லை.

    இதனால் அர்ஜுனின் நண்பர்கள், உறவினர்கள் வீடு என்று பல இடங்களிலும் பெற்றோர் தேடியும் அர்ஜுன் பற்றி எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து அர்ஜுன் மாயமானது பற்றி அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் அர்ஜுனின் நண்பர்கள் சிலரது பெயரை குறிப்பிட்டு அவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.

    அந்த புகாரின் அடிப்படையில் அர்ஜுனின் நண்பர்களான நெட்டூர் பகுதியை சேர்ந்த நிதின் (20), ரோணி (21), அனந்து (21), அஜீத் (21) மற்றும் 17 வயது வாலிபர் ஒருவர் ஆகிய 5 பேரை போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அவர்கள் 5 பேரும் அர்ஜுனை தாங்கள் சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டதாகவும், அவர் எங்கு சென்றார் என்பது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கூறிவிட்டனர்.

    அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் 5 பேரையும் அனுப்பிவிட்டனர். அதன் பிறகு அவர்களை ரகசியமாக போலீசார் கண்காணித்து வந்தனர்.

    அப்போது அந்த கும்பலின் நடவடிக்கைகள் மூலம் அவர்கள் தான் குற்றவாளிகள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த முறை உண்மையை அவர்கள் வாயில் இருந்தே வரவழைப்பதற்காக 5 வாலிபர்களையும் தனித்தனியாக வரவழைத்து தங்கள் பாணியில் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

    அப்போதும் நிதின், ரோனி, அனந்து, அஜீத் ஆகியோர் தாங்கள் ஏற்கனவே கூறியதையே போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் 17 வயது வாலிபர் மட்டும் அர்ஜுனை அவர்கள் 5 பேரும் சேர்ந்து சினிமா பாணியில் கொடூரமாக கொன்றதை போலீசாரிடம் தெரிவித்து விட்டார்.

    கைது செய்யப்பட்ட நிதினின் சகோதரர் எபினும் கொலையுண்ட அர்ஜுனும் நண்பர்களாக பழகி வந்தனர். அதன்பிறகு அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்து உள்ளது.

    இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு அர்ஜு னும், எபினும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு வாகனத்தின் மீது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாது. இதில் எபின் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அர்ஜுன் காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். ஆனால் தனது சகோதரரர் எபினை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று விபத்து போல நாடகமாடி அர்ஜுன் கொலை செய்துவிட்டதாக நிதினுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அர்ஜுனை பழிக்கு பழிவாங்க அவர் திட்டமிட்டார். அர்ஜுனுக்கு தன்மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவரிடம் தொடர்ந்து நண்பர்போலவே பழகினார்.

    சம்பவத்தன்று இரவு அர்ஜுனுக்கு நிதின் போன் செய்து தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாததால் நடுவழியில் நிற்பதாக கூறி அவரை உதவிக்கு அழைத்தார். அதை நம்பி அங்கு சென்ற அர்ஜுனின் மோட்டார் சைக்கிளில் நிதினும், 17 வயது வாலிபரும் ஏறிக் கொண்டனர். அவர்கள் திட்டப்படி அர்ஜுனை அந்த பகுதியில் உள்ள ரெயில்வே பாலம் அருகே அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை எதிர்பார்த்து ரோணி, அனந்து, அஜீத் ஆகியோர் காத்திருந்தனர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து அர்ஜுனை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொன்றனர்.

    பிறகு அவரது உடலில் கல்லை கட்டி அருகில் உள்ள குளத்தில் வீசிவிட்டு சென்று விட்டனர். இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியானது.

    மலையாளத்தில் வெளியான திரிஷியம் சினிமா தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது அந்த படத்தில் கொலையுண்டவரின் செல்போனை நாயகன் சுவிட்ச்-ஆப் செய்யாமல் ஓடும் லாரியில் போட்டு விடுவார். இதனால் அந்த செல்போனுக்கு தொடர்பு கொள்ளும்போது எல்லாம் அழைப்பு மணி ஒலித்துக் கொண்டே இருக்கும். இதனால் இறந்தவர் வெளியூரில் இருப்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

    அந்த படத்தில் இடம் பெற்ற செல்போன் காட்சி போலவே குற்றவாளிகளும் கொலையை மறைக்க திட்டமிட்டு அர்ஜுனின் செல்போனை ஓடும் வாகனத்தில் வீசிவிட்டு நாடகம் ஆடி உள்ளனர். ஆனால் போலீசார் திறமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து உள்ளனர்.
    Next Story
    ×