search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    பா.ஜனதாவுக்கு இவ்வளவு பேராசை இருக்க கூடாது- மம்தா பானர்ஜி கண்டனம்

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    கர்நாடகா காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களை பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் மும்பைக்கு கடத்தி சென்று நட்சத்திர ஓட்டலில் அடைத்து வைத்து இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியினர் சட்ட விரோத குதிரை பேரத்தை மிகவும் வெளிப்படையாக நடத்துவது தெரிகிறது. இது அரசியல் சட்ட அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

    இதே நிலை நீடித்தால் கர்நாடகாவில் ஜனநாயகம் செத்து விடும். இதில் உண்மை நிலையை அறிய முயற்சி செய்த பத்திரிகையாளர்களும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். அந்த வகையிலும் அரசியலமைப்பு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா ஆட்சிக்காக பாரதிய ஜனதா கட்சிக்கு ஏன் இவ்வளவு பேராசை வந்துள்ளது என்று தெரியவில்லை. நாங்கள் மாநில கட்சிகளை ஆதரிக்கிறோம். ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகிறோம்.

    ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் எல்லா மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இந்த நாட்டையே வைத்திருக்க வேண்டும் என்று மிகவும் பேராசைப்படுகிறார்கள். இந்த பொறாமையும், பேராசையும் மிகவும் கீழ்த்தரமான அசிங்கமான அரசியலாகும்.

    கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்த பிறகும் பாரதிய ஜனதாவின் பேராசை முடிந்து விடாது. அடுத்தக் கட்டமாக அவர்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் இலக்குடன் செயல்படுவார்கள். அவர்களது ஆசைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

    மாநில கட்சிகளை உடைத்து, சிதைத்து அங்கு பாரதிய ஜனதா ஆட்சியை அமைப்பதுதான் அவர்களது வேலையா? இந்த மாதிரி செயலை பா.ஜனதா மூத்த தலைவர்கள் கைவிட வேண்டும். மாநில கட்சிகளை விட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் தேவையான நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் ஈடுபட வேண்டும்.

    நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வர பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதை எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
    Next Story
    ×