search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    ராஜினாமா ஏற்க மறுப்பு- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

    கர்நாடகாவில் ராஜினாமா செய்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதால் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் 10 பேர், மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி தலைமை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சமாதானம் செய்வதற்காக இன்று மும்பை சென்ற மந்திரி டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் விட போலீசார் மறுத்துவிட்டனர்.

    இதற்கிடையே ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் இதுவரை ஏற்கவில்லை. நேரில் வந்து கொடுத்தால் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். ஆனால், பதவி விலகுவதில் எம்எல்ஏக்கள் உறுதியாக உள்ளனர். இதற்காக, மும்பையில் தங்கியிருக்கும் 10 எம்எல்ஏக்களும் இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    கர்நாடகா சட்டசபை சபாநாயகர்

    அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், இதன்மூலம் சபாநாயகர் தனது அரசியலமைப்பை கடமையில் இருந்து தவறிவிட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுவை பரிசீலனை செய்தது. அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
    Next Story
    ×