search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    9 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் ராஜினாமா கடிதம்

    சபாநாயகரால் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்ட 9 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் ராஜினாமா கடிதம் எழுதி உள்ளனர். இந்த முறை அவர்கள் ராஜினாமா கடிதத்தை சட்ட விதிகளுக்கு உட்பட்டு எழுதியுள்ளனர்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை 13 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    அந்த 13 எம்.எல்.ஏ.க்களில் ரமேஷ் ஜார்கிஹோசி, ராமலிங்க ரெட்டி, எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், சிவராம் ஹெப்பார், பிரதாப் கவுடா பாட்டீல், மகேஷ் குமட்ட ஹள்ளி, முனிரத்னா, சவும்யா ரெட்டி ஆகிய 10 பேரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். எச்.விசுவநாத், கே.சி.நாராயண கவுடா, கோபாலையா ஆகிய 3 பேரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

    சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாறியுள்ளார். இந்த 14 எம்.எல்.ஏ.க்களும் கடந்த மூன்று நாட்களாக மும்பையில் உள்ள நட்சத்திர சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை சமரசம் செய்ய காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் முயற்சி செய்தனர். அமைச்சர் பதவி மற்றும் தேவையான அளவுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி தரப்படும் என்று பேரம் பேசப்பட்டது. ஆனால் ராஜினாமா செய்த 13 எம்.எல்.ஏ.க்களும் அந்த சமரசத்தை ஏற்க மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார் நேற்று 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை ஆய்வு செய்தார். அப்போது நாராயண கவுடா, பிரதாப் கவுடா, ராமலிங்க ரெட்டி, கோபாலையா ஆகிய 4 பேரின் ராஜினாமா கடிதம் மட்டுமே முறைப்படி உரிய முறையில் எழுதி சமர்ப்பிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. எனவே அந்த 4 பேரிடம் மட்டும் முதலில் விளக்கம் கேட்க சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

    அதன்படி நாராயண கவுடா, பிரதாப் கவுடா ஆகிய இருவரையும் வருகிற 12-ந்தேதியும் ராமலிங்க ரெட்டி, கோபாலையா ஆகிய இருவரையும் 15-ந் தேதியும் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு உத்தர விட்டுள்ளார். மற்ற 9 எம்.எல். ஏ.க்களின் ராஜினாமா கடிதம் உரிய முறைப்படி எழுதாமல் விதி முறைகளை மீறி எழுதப்பட்டு இருப்பதால், அந்த 9 பேரின் ராஜினாமா கடிதங்களை ஏற்க இயலாது என்று நிராகரித்து விட்டார்.

     

    கர்நாடகா சட்டசபை சபாநாயகர்

    இதுபற்றி சபாநாயகர் ரமேஷ்குமார் கூறுகையில், “எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரத்தில் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பேன். 9 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுத்தால் அது பற்றி பரிசீலனை செய்யப்படும். ராஜினாமா செய்த எம்.எல்.எ.க்களின் பதவியை பறிக்க காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அது பற்றியும் ஆய்வு செய்து வருகிறேன்” என்றார்.

    இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. சிவலிங்க ரெட்டி இருவரும் மும்பை சென்றனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச அவர்கள் முயன்றனர். ஆனால் அவர்களை மும்பை நட்சத்திர ஓட்டலுக்குள் செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் சிவகுமாரின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

    இந்த நிலையில் சபாநாயகரால் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டதால் 9 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் ராஜினாமா கடிதம் எழுதி உள்ளனர். இந்த தடவை அவர்கள் ராஜினாமா கடிதத்தை சட்ட விதிகளுக்கு உட்பட்டு எழுதியுள்ளனர்.

    சபாநாயகரிடம் அந்த ராஜினாமா கடிதங்களை இன்றே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ் குமார் உடனடியாக ஏற்றுக் கொள்வாரா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. 9 எம்.எல்.ஏ.க்களையும் அவர் தனித்தனியாக அழைத்து பேசிய பிறகே இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் கர்நாடகா அரசியல் குழப்பம் நீடித்தப்படி உள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கர்நாடகா சட்டசபை கூட்டத் தொடர் ஆரம்பிக்க உள்ளது. இந்த கூட்டத்தில் குமாரசாமியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் அமளியில் ஈடுபடுவார்கள்.

    சட்டசபையில் முதல்வராக பதவியேற்றபோது குமாரசாமிக்கு 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தது. தற்போது 16 எம்.எல்.ஏ.க்கள் விலகி சென்று விட்டதால் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 103 ஆக குறைந்து விட்டது. சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையும் 209 ஆக குறைந்து இருக்கிறது.

    எனவே தற்போது 105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதும் மெஜாரிட்டியை நிரூபித்து விடலாம். பாரதிய ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை பா.ஜனதா தலைவர்கள் சுட்டிக்காட்டி, குமாரசாமியை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

    சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும்போது குமாரசாமிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் கவனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதை கவர்னர் ஏற்பாரா என்பது தெரியவில்லை.

    ஒரு வேளை சட்டசபை கூட்டத்தொடரில் மெஜாரிட்டியை குமாரசாமி நிருபிப்பதாக ஒப்புக் கொண்டால் அவரது ஆட்சிக்கு எதிராக ஓட்டு அளிக்கும் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க முடியும்.

    அப்படி பதவியை பறித்தாலும் குமாரசாமிக்கு போதிய பலம் கிடைக்காது. இதனால் அவர் பதவி விலக வேண்டிய சூழ்நிலை வரும்.

    ஆனாலும் சபாநாயகரின் முடிவை பொறுத்துதான் அடுத்தக்கட்ட அரசியல் நுகர்வை முடிவு செய்ய முடியும். சபாநாயகரின் முடிவு தெரிந்தபிறகு தான் கர்நாடக அரசியல் குழப்பத்திற்கு விடிவுகாலம் கிடைக்கும்.

    Next Story
    ×