search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதானந்தகவுடா
    X
    சதானந்தகவுடா

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் - சதானந்தகவுடா

    குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறியுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மதசார் பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்ப்பதற்கு பாரதிய ஜனதா தொடர்ந்து முயற்சித்து வந்தது.

    இப்போது மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை கையில் எடுத்துள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மற்றும் ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.

    நேற்று ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சங்கர், நாகேஸ் ஆகியோரும் அரசுக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். அவர்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

    இதுவரை ஆளும் கட்சி அணியில் இருந்து 15 பேர் வெளியேறி இருக்கிறார்கள். இதனால் அரசு மெஜாரிட்டி இழந்துவிட்டது.

    கர்நாடக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 224 அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 79. ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 37.

    2 சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. என 3 பேர் ஆதரவு அளித்ததால் இதன் பலம் 119 ஆக இருந்தது. இப்போது 15 பேர் விலகி விட்டதால் இதன் எண்ணிக்கை 104 ஆக குறைந்துள்ளது.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இப்போது 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து இருப்பதால் அதன் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

    அதாவது ஆளும் கட்சியை விட 3 எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு அதிகம் உள்ளனர். இதனால் குமாரசாமியின் அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது.

    இதற்கிடையே காங்கிரசின் ஆனந்த்சிங் என்ற எம்.எல்.ஏ. ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறினார். ஆனால் சபாநாயகர் அந்த கடிதம் வரவில்லை என்று கூறிவிட்டார். அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று இன்னும் முடிவாகவில்லை.

    அதேபோல பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.வும் என்ன முடிவில் இருக்கிறார் என்பதும் உறுதியாக தெரியவில்லை. அவர்கள் 2 பேரும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான நிலை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பாரதிய ஜனதாவின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துவிடும்.

    குமாரசாமி

    ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை இதுவரை சபாநாயகர் ஏற்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அவர் சட்டசபைக்கு வர மறுத்து விட்டார். நேற்று விடுமுறை எடுத்திருந்தார்.

    இன்று அவர் சட்டசபைக்கு அலுவலகத்துக்கு வர உள்ளார். அவர் இன்று 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து முடிவு எடுக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராஜினாமாவை அவர் ஏற்கலாம் அல்லது எம்.எல்.ஏக்களை நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளலாம்.

    பதவி விலகிய எம்.எல்.ஏ.க் களை பாரதிய ஜனதா கட்சியினர் மும்பை அழைத்து சென்று ஓட்டலில் தங்க வைத்திருந்தனர். அவர்களை இப்போது கோவாவில் உள்ள ரிசார்ட் ஓட்டலுக்கு மாற்றி இருக்கிறார்கள். சபாநாயகர் அழைக்கும் பட்சத்தில் நேரடியாக வந்து விளக்கம் அளிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    இதற்கிடையே 13 எம்.எல்.ஏ.க்களையும் கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

    எனவே சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்பாரா? அல்லது கட்சி தாவல் சட்டப்படி 13 பேரின் பதவியை பறிப்பாரா? என்று தெரியவில்லை. ஒரு வேளை அவர் முடிவு எடுப்பதை தள்ளிப்போடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதைய நிலவரப்படி சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் அமையும்.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி அடுத்த ஆட்சி அமைப்பதற்கு எல்லா முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் அரசு மெஜாரிட்டி இழந்து விடும் என்பதால் குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவாகும்.

    அப்போது கவர்னர் உரிய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். தனிப் பெரும் கட்சி என்பதால் பாரதிய ஜனதாவை அவர் ஆட்சி அமைக்க அழைக்கலாம். எனவே அதற்கு பாரதிய ஜனதா தயாராகி வருகிறது.

    இது சம்பந்தமாக கர்நாடக பா.ஜனதா கட்சி மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான சதானந்தகவுடா கூறியதாவது:-

    தற்போதைய நிலையில் சபாநாயகர் தனது அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடமாட்டார் என நம்புகிறேன். சபாநாயகர் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்பதாக இருந்தாலும் சரி, அல்லது ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சரி அதில் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.

    எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் ராஜினாமா செய்து கொள்ள உரிமை இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் அவர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். சபாநாயகர் எடுக்கும் முடிவை பொறுத்து நாங்கள் அடுத்த கட்ட நகர்வுகளை செய்வோம். பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரும்.

    நாங்கள் ஏற்கனவே அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்த நிலையில் ஆட்சி அமைத்தோம். அதை தொடர முடியவில்லை. இப்போது மாற்று கட்சியை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் எங்களுடைய கட்சியின் செயல்பாடுகள், பிரதமரின் வளர்ச்சி திட்டங்கள், கொள்கைகள் காரணமாக எங்களோடு வந்துள்ளனர்.

    நாங்கள் யாரையும் எங்கள் கட்சிக்கு இழுக்கவில்லை. அங்கு நிலவும் அதிருப்தி, விரக்தி காரணமாக அவர்கள் எங்கள் பக்கம் வருகிறார்கள். கடந்த ஓராண்டாக கர்நாடகாவில் ஆட்சியே நடக்க வில்லை. மக்கள் அனைவரும் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள்.

    ஆளும் கூட்டணி அரசின் தலைவர்கள் தெருச்சண்டை போடுபவர்கள் போல நடந்து கொள்கிறார்கள். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. அதைகூட கவனிக்க ஆள் இல்லை.

    இந்த சூழ்நிலையில் நாங்கள் ஆட்சி அமைப்பது அவசியமான ஒன்று என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கும் வகையில் நேற்று காங்கிரஸ், ஜனதா தளம் மந்திரிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தார்கள். ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பிடியில் உள்ளதால் காங்கிரஸ்காரர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    எனவே இந்த ராஜினாமாவால் எந்த பலனும் இல்லை என்ற நிலை இருக்கிறது. ஆனாலும் ஆட்சியை தக்க வைக்க முடியுமா? என்று காங்கிரஸ் - ஜனதா தளம் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் மேலிட தலைவர் வேணுகோபால் பெங்களூரிலேயே முகாமிட்டு மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆனாலும் நிலைமை கைமீறி சென்றுவிட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் காங்கிரஸ் - ஜனதா தளம் தலைவர்கள் தவிக்கிறார்கள்.

    Next Story
    ×