search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    காங்கிரஸ் எம்எல்ஏக்களை மிரட்டி பாஜக ராஜினாமா செய்ய வைத்துள்ளது- சித்தராமையா குற்றச்சாட்டு

    விசாரணை அமைப்புகள் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மிரட்டி பா.ஜனதா ராஜினாமா செய்ய வைத்து இருப்பதாக கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி ஆட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி அரசை காப்பாற்றும் நடவடிக்கையில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், பெங்களூருவில் முகாமிட்டு ஆட்சியை தக்கவைப்பது பற்றி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா வீட்டில் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் பெரும்பாலான மந்திரிகள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் மந்திரிகள் அனைவரும் ராஜினாமா கடிதங் களை சித்தராமையாவிடம் வழங்கினர். இந்த கூட்டத்திற்கு பிறகு கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவரும், கர்நாடக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டில் கடந்த 5 ஆண்டு களாக ஜனநாயக விரோத செயல்களில் பா.ஜனதா ஈடுபட்டு வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுத்து வருகிறது. அந்த மாநிலங்களில் இருக்கும் மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 மந்திரிகள் தாமாகவே முன்வந்து ராஜினாமா கடிதத்தை என்னிடம் கொடுத்துள்ளனர். கட்சியின் நலன் கருதி கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளவர்களை நான் பாராட்டுகிறேன்.

    பா.ஜனதாவினர், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக மும்பைக்கு அழைத்துச் சென்று ஓட்டலில் தங்க வைத்துள்ளனர். இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளுக்கு களங்கம் ஏற்படாது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் பா.ஜனதாவுக்கு தான் கெட்ட பெயர் உண்டாகும். மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவோம்.

    சித்தராமையா, குமாரசாமி,

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் சிலருக்கு மந்திரியாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும். அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம். மும்பையில் இருந்து பெங்களூரு திரும்பும்படி அவர்களுக்கு தெரிவித்துள்ளோம். அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வர நாங்கள் மும்பை செல்லவில்லை. அவர்களே பெங்களூரு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ள மந்திரிகள், எங்களுக்கு அதிகாரம் முக்கியம் அல்ல, கட்சியின் நலன் தான் முக்கியம் என்று கூறினர். மும்பையில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். பா.ஜனதாவினர் இதுவரை 5 முறை கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சி செய்தனர். அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இப்போது 6-வது முறையாக இந்த கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதாவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த 6-வது முயற்சியிலும் பா.ஜனதா தோல்வி அடையும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. அந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு அதிக இடங்கள் கிடைத்திருந்தாலும், காங்கிரசுக்குதான் அதிக வாக்குகள் கிடைத்தன. ஆட்சி அமைக்க தேவையான இடங்கள், பா.ஜனதாவுக்கு கிடைக்கவில்லை.

    ஆனால் பெரும்பான்மை பலம் இல்லாத பா.ஜனதா, மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறது. வருமான வரி, சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை மிரட்டி பா.ஜனதா ராஜினாமா செய்ய வைத்துள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யப்பட்டதில் எங்களின் பங்கு இல்லை என்று பா.ஜனதா கூறி புதிய நாடகமாடுகிறது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததில் பா.ஜனதாவுக்கு நேரடி தொடர்பு உள்ளது. அந்த எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு செல்ல சிறப்பு விமானத்தை பா.ஜனதா தான் ஏற்பாடு செய்தது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×