
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முறைகேடாக கையகப்படுத்தி இருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை தற்போது தீவிரமாகி உள்ளது. சாரதா சிட்பண்ட் ஊழலில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரது பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்காளத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் மந்திரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
அதுபோல பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மீதும் சி.பி.ஐ. பிடி இறுகி வருகிறது. 2011-12-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 21 சர்க்கரை ஆலைகளை விற்பனை செய்ததில் மாயாவதி மோசடி செய்து இருப்பதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரித்துள்ளது.
இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் 13 சுரங்கங்களை ஏலம் விட்டதில் முறைகேடு செய்து இருப்பதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருக்கிறது. இதற்கான குற்றப்பத்திரிகையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் அகிலேஷ் யாதவ் மீதும் சி.பி.ஐ. பிடி இறுகி வருகிறது.