search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதின் கட்காரி
    X
    நிதின் கட்காரி

    சிறு, குறு தொழில் துறை தயாரிப்புகள் இணையதளம் மூலம் விற்பனை- நிதின் கட்காரி

    சிறு, குறு, நடுத்தர தொழில் துறை தயாரிப்புகள் மற்றும் கதர் வாரிய பொருட்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவையில் நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிறு, குறு தொழில்கள் துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை 29 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இதை கணிசமாக அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    குறிப்பாக அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஜி.டி.பி.யில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளின் பங்களிப்பு 50 சதவீதமாக இருக்க வேண்டும் என நாங்கள் இலக்கு நிர்ணயித்து உள்ளோம். அத்துடன் இந்த துறையில் 15 கோடி வேலை வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும்.

    இந்த இலக்கை நாங்கள் எட்டவில்லை என்றால், நீங்கள் (எதிர்க்கட்சி உறுப்பினர்கள்) என்னை கேள்வி கேட்கலாம். சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அனைத்து இலக்குகளையும் நாங்கள் எட்டியது போல, இந்த இலக்கையும் எட்டுவோம்.

    இணையதளம்

    சீனா போன்ற நாடுகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன. அதைப்போல இந்தியாவும் இந்த துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. சந்தைப்படுத்துதல், தொழிலாளர் பிரச்சினைகள், நிர்வாக குளறுபடிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த துறைகள் சந்தித்து வருகின்றன.

    அலிபாபா, அமேசான் போன்ற இணைய விற்பனை நிறுவனங்கள் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகளுக்கு சர்வதேச அளவிலான விற்பனை தளத்தை வழங்குகின்றன. அந்த அடிப்படையில் நமது சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மற்றும் கதர்வாரிய உற்பத்தி பொருட்களும் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படும்.

    இதற்காக அலிபாபா, அமேசான் போல இணைய விற்பனை தளம் ஒன்றை தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த இணைய விற்பனை தளம் மூலம் மேற்படி துறைகளில் இயங்கும் ஒருவர், தனது உற்பத்தி பொருட்களை உலகின் எந்த பகுதிக்கும் விற்பனை செய்ய முடியும்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
    Next Story
    ×