search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் வீடுகளை சூழ்ந்துள்ள காட்சி
    X
    அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் வீடுகளை சூழ்ந்துள்ள காட்சி

    மகாராஷ்டிராவில் அணை உடைந்ததால் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்- 9 பேரின் சடலங்கள் மீட்பு

    மகாராஷ்டிர மாநிலத்தில் அணை உடைந்து தண்ணீர் வெளியேறியதால், வீடுகளுடன் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாக நிரம்பி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் ஆக்ரோஷத்துடன் வெளியேறியது.

    இதன் காரணமாக, அணையின் அருகில் உள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்களைக் காணவில்லை. இதுதவிர அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது.

    உடைப்பு ஏற்பட்ட அணை


    இதையடுத்து மாவட்ட அதிகாரிகள், போலீசார், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை தேடினர். காலையில் 2 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மதிய நிலவரப்படி 3 பெண்கள் உள்பட 9 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 12 பேரைக் காணவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

    அணை உடைந்ததற்கான காரணங்கள் குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மாவட்ட  நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டுள்ளார்.

    அணையின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருந்ததாக புகார் வந்ததால், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் சமீபத்தில் அணையை ஆய்வு செய்ததாக சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×