search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா பேசிய காட்சி.
    X
    அமித் ஷா பேசிய காட்சி.

    காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி 6 மாதங்கள் நீட்டிப்பு - மாநிலங்களவையிலும் தீர்மானம் நிறைவேறியது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வகைசெய்யும் தீர்மானம் நீண்ட விவாதத்துக்கு பின்னர் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல் மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதால் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சி கடந்த 19-6-2018 அன்று கவிழ்ந்தது.

    இதைதொடர்ந்து, அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு 6 மாத காலம் கவர்னர் ஆட்சியும், பின்னர் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஜூலை மூன்றாம் தேதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகைசெய்யும் தீர்மானத்தை கடந்த 28-6-2019 அன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா  பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.

    காஷ்மீரில் கடந்த ஓராண்டு காலமாக கவர்னர் ஆட்சிக் காலத்தின்போதும், ஜனாதிபதி ஆட்சிக் காலத்தின்போதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தின் வேர்களை அறிந்து பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதேபோல், முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் ரத்தக்களறியை சந்தித்த காஷ்மீரில் இந்த முறை நடந்த தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் குறைந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.

    எனவே, காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வகைசெய்யும் தீர்மானத்தை கட்சி வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் அனைத்து எம்.பி.க்களும் ஆதரிக்க வேண்டும் என இந்த தீர்மானத்தை தாக்கல் செய்த அமித் ஷா வலியுறுத்தினார். சிறிய விவாதத்துக்கு பின்னர் அந்த தீர்மானம்  மக்களவையில் நிறைவேறியது.

    கடந்த சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடியபோது இதே தீர்மானம்  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த தீர்மானத்தின் மீது உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் ஆகியோர் இடையே மணிக்கணக்கில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

    அணல் பறந்த இந்த விவாதத்துக்குப் பின்னர், காஷ்மீரில் ஜூலை மூன்றாம் தேதியில் இருந்து மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்திருத்த மசோதா ஆகியவை இன்றிரவு குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×