search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆனந்த் சிங்
    X
    ஆனந்த் சிங்

    கர்நாடகாவில் கூட்டணி ஆட்சிக்கு மேலும் சிக்கல் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா

    கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்ப்பதற்கு பாஜக காய் நகர்த்திவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. இன்று ராஜினாமா செய்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவ்விரு கட்சிகளும் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையும் கூட்டணி அமைத்து சந்தித்தன. இந்த கூட்டணியால் அதிக இடங்களை கைப்பற்ற முடியாமல் போனது.

    இந்த தோல்விக்கு  மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி கூட்டணிக்குள் விரிசலை அதிகப்படுத்தி அம்மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் எதிர்க்கட்சியான  பாஜக காய் நகர்த்தி வருகிறது.

    இதற்கிடையில், பிரபல தனியார் நிறுவனத்துக்கு 3,667 ஏக்கர் நிலத்தை வழங்க கர்நாடக மாநில அரசு முன்வந்ததை எதிர்ப்பு தெரிவித்து விஜயநகர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் என்பவர் வெளிப்படையாக பேட்டியளித்தார்.

    தாக்குதலின்போது காயமடைந்த ஆனந்த் சிங்

    கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் மற்றொரு எம்.எல்.ஏ.வுடன் நடந்த அடிதடி சம்பவத்தின் மூலம் இவர் ஊடகங்களில் மிகவும் பரிச்சயமானவர் என்பது நினைவிருக்கலாம்.

    இந்நிலையில், தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை இன்று ஒப்படைத்ததாகவும் ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார். அவரது வழியில் மேலும் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்த இயலாத தகவல் வெளியாகியுள்ளது.

    கர்நாடக மாநில முதல் மந்திரி குமாரசாமி நியூ ஜெர்சி நகரில் நடைபெறும் காலபைரேஷ்வரர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஆனந்த் சிங் ராஜினாமா தொடர்பாக குறிப்பிட்ட குமாரசாமி, ‘எங்கள் அரசை நிலைகுலைய வைக்கும் பாஜகவின் முயற்சிகள் எல்லாம் பகல்கனவாகவே இருக்கும். ஒருநாளும் பலிக்கப் போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

    சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஆனந்த் சிங் இன்று ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்தார். அவர் விரைவில் பாஜகவில் இணையக்கூடும் என கர்நாடக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    Next Story
    ×