search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி ஆட்சியில்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் - முன்னாள் மத்திய மந்திரி பேச்சு
    X

    மோடி ஆட்சியில்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் - முன்னாள் மத்திய மந்திரி பேச்சு

    பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ்வதாக முன்னாள் மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் மாநிலங்களவையில் பேசினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா எம்.பி.யுமான அல்போன்ஸ் கன்னன்தானம், இதுவரை இருந்த பிரதமர்களிலேயே மோடிதான், மிகப்பெரிய ஜனநாயகவாதி எனக்கூறினார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவார்கள், தேவாலயங்கள் தீக்கிரையாகும் என்ற பேச்சு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு எந்த கிறிஸ்தவராவது தாக்கப்பட்டதையோ, அல்லது எந்த ஆலயமாவது எரிக்கப்பட்டதையோ நீங்கள் பார்த்ததுண்டா?’ என்று கேள்வி எழுப்பினார்.



    தொடர்ந்து அவர் கூறும்போது, ‘பிரதமர் மோடியின் ஆட்சியைப்போல் வேறு எந்த ஆட்சியிலும் சிறுபான்மையினர்கள் பாதுகாப்பாக இருந்ததில்லை. மோடி ஆட்சியில்தான் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக வாழ்கின்றனர்’ என்று கூறினார்.

    அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் அடித்துக்கொலை செய்யப்படும் சம்பவங்களை கூறி அல்போன்சை கேலி செய்தனர்.

    இதற்கு அல்போன்ஸ் கன்னன்தானம் பதிலளிக்கையில், ‘நீங்கள் புலம்புவதற்கு பதிலாக, 99.2 சதவீத மக்கள் கழிவறை பெற்றிருப்பது, 35 கோடி மக்கள் வங்கிக்கணக்கு பெற்றது, 7.5 கோடி பேர் கியாஸ் இணைப்பு பெற்றது, 19 கோடி பேர் முத்ரா திட்டத்தில் கடன் பெற்றது, எதிரிகளின் இதயத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியது போன்ற சாதனைகளை கொண்டாடுங்கள்’ என்று தெரிவித்தார்.

    இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய பகுஜன் சமாஜ் உறுப்பினர் வீர் சிங், வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக மத்திய அரசை சாடினார். அரசின் தவறான முடிவுகள் மற்றும் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்ற தவறான கொள்கைகளால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

    ஜனாதிபதி உரையில் வடகிழக்கு மாநிலங்களுக்கு என எந்த சிறப்பு ஒதுக்கீடும் இல்லை என குறைகூறிய காங்கிரஸ் உறுப்பினர் வான்சுக் சையிம், அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். போன்ற நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஜனாதிபதி உரையில் எந்த திட்டமும் இடம்பெறவில்லை என்று தெரிவித்தார்.
    Next Story
    ×