search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ் சக்சேனா வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் தடை
    X

    ராஜீவ் சக்சேனா வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் தடை

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக மாறிய ராஜீவ் சக்சேனா சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல டெல்லி ஐகோர்ட் அளித்த அனுமதிக்கு சுப்ரீம் கோர்ட் இன்று தடைவிதித்தது.
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
     
    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா, மைக்கேல் சக்சேனா ஆகியோர்  கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வருகின்றனர்.
     
    கடந்த மார்ச் 6-ந்தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையின்போது இவ்வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக (அப்ரூவராக) மாறி வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக ராஜீவ் சக்சேனா தெரிவித்திருந்தார். ராஜீவ் சக்சேனா அரசுதரப்பு சாட்சியாக மாறுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும் அனுமதி அளித்தது.

    இந்நிலையில், ரத்தப்புற்று நோய் உள்ளிட்ட சில நோய்களால் நான்பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ராஜீவ் சக்சேனா மனு தாக்கல் செய்தார். கடந்த பத்தாம் தேதி ஐகோர்ட்டும் இதற்கு அனுமதி அளித்தது.

    ஜூன் 25 முதல் ஜூலை 24 வரை ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு செல்ல ராஜீவ் சக்சேனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து பொருளாதார அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.



    இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜீவ் சக்சேனா மீண்டும் இந்தியா திரும்பி வருவார் என்ற உறுதிமொழியுடன் தலா 5 கோடி ரூபாய் உத்திரவாதத்தொகை செலுத்தும் இருவரை முன்னிறுத்துமாறு சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவுறுத்தியது.

    மேலும், ராஜீவ் சக்சேனாவின் மனநலம் மற்றும் உடல்நிலையை முழுமையாக பரிசோதித்து 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனருக்கு இன்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் அவர் வெளிநாடு செல்ல முன்னர் டெல்லி ஐகோர்ட் அளித்த அனுமதிக்கு 3 வார காலத்துக்கு தடை விதித்துள்ளது.
    Next Story
    ×