search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் முன்னாள் முதல்வர் கட்டிய பிரஜா வேதிகா கட்டிடம் இடிப்பு
    X

    ஆந்திராவில் முன்னாள் முதல்வர் கட்டிய பிரஜா வேதிகா கட்டிடம் இடிப்பு

    ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெறுகிறது.
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் அமராவதி அருகே கிருஷ்ணா நதிக்கரையில் பிரஜா வேதிகா என்ற அரசு கட்டிடம் அமைந்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்தின்போது, அவரது வீட்டின் அருகே ரூ.5 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்திக்கவும், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் இந்த கட்டிடத்தை சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையில், ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதும் இந்த கட்டிடத்தில் இருந்த சந்திரபாபு நாயுடுவிற்கு சொந்தமான பொருட்களை வெளியேற்றினார். அத்துடன் அந்த கட்டிடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டார்.

    அதன்படி பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று இரவு தொடங்கியது. புல்டோசர் மூலம் கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.



    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக, பிரஜா வேதிகா கட்டிடத்தில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு கடிதமும் எழுதினார். ஆனால், விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதால் கட்டிடம் இடித்து அகற்றப்பட வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
    Next Story
    ×