search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை தேர்தல் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல்
    X

    மாநிலங்களவை தேர்தல் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல்

    வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் நேற்று பாஜகவில் இணைந்த ஜெய்சங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
    அகமதாபாத்:

    பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய மத்திய அரசில் வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்தவர் ஜெய்சங்கர்(64). கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பாஜக கைப்பற்றி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தபோது புதிய மந்திரிசபையில் வெளியுறவுத்துறை மந்திரி பதவி ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையில், முன்னர் குஜராத் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த பாஜக தலைவர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மாநிலங்களவையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரு உறுப்பினர்களுக்கான இடம் காலியானது. இந்த இடங்களுக்கு ஜூலை 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    அரசியல் தொடர்பு ஏதுமின்றி வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் உயர் பதவி வகித்த அனுபவத்தினால் அத்துறையின் மந்திரியாக பதவியேற்ற ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் முறைப்படி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    எம்.பி.க்களாக இல்லாமல் மத்திய மந்திரியாக பதவியேற்றவர்கள் 6 மாதங்களுக்குள் பாராளுமன்ற மக்களவை அல்லது மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றால்தான் பதவியில் நீடிக்க முடியும்.



    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அகமதாபாத் நகரில் உள்ள சட்டசபை வளாகத்தில் தேர்தல் அதிகாரி பான்டியா-விடம் அவர்  வேட்புமனு தாக்கல் செய்தபோது குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி, அம்மாநில பாஜக தலைவர் ஜிட்டு வகானி ஆகியோர் உடனிருந்தனர்.

    குஜராத்தில் காலியாக உள்ள மற்றொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜகவை சேர்ந்த ஜுகல்ஜி தாக்கோர் என்பவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. நாளை பரிசீலனை, திரும்பப்பெற கடைசி நாள் வரும் 28-ம் தேதி என்ற நிலையில் மேற்கண்ட இரு இடங்களுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களாக கவுரவ் பான்டியா மற்றும் சந்திரிகா சுதாசாமா ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×